

கதை: சி.வைஜெயந்தி
ஒவியம்; சேகர்
'நான் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கப் போகிறேன்' இந்த வாக்கியத்தை முடிப்பதற்குள் 'பூகம்பம்' என்பார்களே, அது இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றுமளவுக்கு, வீடே அதிர்ந்தது. ஒரு படிமேலே போய், ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுக்கப் போகிறேன் என்றதும், பிரளயத்தையே அனுபவிக்கிறோமோ என்று எண்ணத் தூண்டியது சுற்றியிருப்போரின் நடவடிக்கைகள்.
திருமணமாகி இருபது வருடங்களாக குழந்தையில்லாமல் ஏங்கி நிற்கும் ஒரு பெண்ணின் உணர்வுகளை இவர்கள் எங்கே புரிந்துகொள்ளப் போகிறார்கள்? இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வாரிசு வேண்டும், அதை எவ்வளவு பணம் செலவழித்தாவது உருவாக்கவேண்டும் என்பதே.
பத்து வருடங்களாகப் பார்த்த டாக்டர்களும், எடுத்துக்கொண்ட சிகிச்சையும் என் மனதையும், உடலையும் எவ்வளவு இம்சித்திருக்கின்றன என்பதை இவர்கள் உணர்வார்களா? நாற்பது வயதை நெருங்கும் நான், இனி எப்போது கருத்தரித்து, எந்த வயதில் அந்தக் குழந்தைக்கு உண்டான கடமைகளைச் செய்து முடிப்பது? இப்போதே அடிக்கடி உடல் சோர்வடைகிறது. கணக்கே இல்லாமல் உண்ட மருந்துகளின் பக்க விளைவுகள் உடலில் நன்றாகவே தெரிகின்றன. இனியும் 'வேண்டாம் இந்த நரகவேதனை' என்று முடிவெடுத்துவிட்டேன்.
அதிர்ஷ்டவசமாக என் கணவரும், நான் படும் அவஸ்தையைக் காணச் சகியாமல், உடன்பட்டுவிட்டார். வயதான இருவரின் பெற்றோரும், உடன் பிறந்தோரும்தான் எதிர்க்கிறார்கள். ஆனாலும், என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
தத்தெடுப்பதற்கான எல்லா ஆவணங்களையும் நிரப்பி, ஆரோக்கியமான பெண் குழந்தையை ஒரு அநாதை ஆசிரமத்திலிருந்து கொண்டு வந்துச் சேர்ப்பதற்குள் என் வயது இன்னும் ஐந்து வருடம் கூடியது போலாகிவிட்டது. ஆனால், குழந்தையினால் கிடைத்த இன்பமானது பத்து வருடத்தைக் குறைத்துவிட்டது.
மூன்று மாதமே ஆன ஆர்த்தி வந்த நாளிலிருந்து வீடே சொர்க்கமானது. முதலில் விலகி இருந்தப் பெற்றோர்கள், நாங்கள் அனுப்பிய புகைப்படங்கள், வீடியோ படங்கள் எல்லாம் பார்த்து மெள்ள இளகினார்கள். ஒவ்வொருவராக ஏதோ காரணம் சொல்லிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். ஆர்த்தியைப் பார்த்ததும், அவள் சிரிப்பில் மயங்கினார்கள். என் நாத்தனார் ஒருபடி மேலேப் போய், தன் தம்பி சிரிப்பதைப் போலவே இருப்பதாகச் சத்தியமே செய்தார். ஆர்த்தியின் அதிர்ஷ்டம், அவள் தத்துக் குழந்தை என்பதை எல்லோரும் மறக்கும்படிச் செய்துவிட்டது. ஆர்த்தி நாளொரு மேனியும் பொழுதொரு சேட்டையுமாக வளர்ந்தாள். அவள் வந்த நேரம் என் கணவருக்கு வேலை உயர்வும், எதிர்பாராத சம்பள உயர்வும் கிடைத்தன. அவளைப் புகழாதவரே இல்லை.
என் வாழ்வில், அடுத்த பெரிய திருப்புமுனை விரைவிலேயே நடந்தது. ஆர்த்திக்கு இரண்டு வயதாகும்போது நான் கருவுற்றேன். மீண்டும் வீட்டில் மகிழ்ச்சி அலை. கோகுல் பிறந்தபோது நாங்கள் எல்லோரும் சந்தோஷத்தின் எல்லையைத் தொட்டுவிட்டிருந்தோம். ஆர்த்தியும், கோகுலும் செய்த அட்டகாசம் எங்களை ஆனந்தத்தில் திக்குமுக்காட வைத்தது.
அன்று ஆர்த்தியின் ஐந்தாவது பிறந்த நாள். எல்லோரும் அவள் வந்த நேரம்தான் கோகுல் வந்து பிறந்தான் என்று அவளைக் கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வளவு சந்தோஷத்துக்கிடையேயும் என் மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல். பத்து வருடங்களாகத் தீவிர சிகிச்சை எடுத்துப் பிறக்காத குழந்தை, ஏன் சிகிச்சையை நிறுத்தி இரண்டு வருடங்கள் கழித்துப் பிறந்தான்? எனக்கு பதில் தெரியவில்லை.
என் நாக்கு கரி நாக்கு என்று என் தங்கை கூறுவாள். அதேபோல் என் எண்ணங்களும்தான் கரி எண்ணங்கள் போலும். ஆர்த்தியின் ஐந்தாவது பிறந்த நாள் அன்று எங்கள் தலையில் இடி விழுந்தது! கோகுல் எங்கள் வீட்டுத் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து இறந்துவிட்டான். எல்லோரும் 'பர்த்டே பார்ட்டி' ஜோரில் அவன் சிறிது நேரம் காணாமல் போனதைக் கவனிக்கவில்லை. பார்த்தபோது எல்லாம் முடிந்திருந்தது.
ஆயிற்று... மகனைப் பறிகொடுத்த சோகத்தை ஆர்த்தியின் முகத்தைப் பார்த்து மறைக்க முயல்கிறேன். ஆனாலும், அவள் "தம்பிப் பாப்பா வேணும்" என்று அடம்பிடிக்கும்போது என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு இப்போது வயது நாற்பத்தாறு.'மெனோபாஸ்' நெருங்கிற எல்லா அறிகுறிகளும் ஆரம்பமாகிவிட்டன. இனி எங்கே இன்னொரு குழந்தை?
ஆர்த்திக்கு இப்போது வயது பத்து. வயதுக்கு மீறிய மனப்பக்குவம். ஆனால், அவளால் கோகுலை மட்டும் மறக்க முடிய வில்லை.
ஒரு நாள் "அம்மா, நான் ஒரு தம்பியைத் தத்தெடுக்கப் போகிறேன்" என்றாள். 10 வருடத்துக்கு முன் நான் சொன்ன சொற்களேதான் சிறிது மாற்றத்துடன் என் காதிலேயே கேட்கின்றன. நானும் பூகம்பமாக, பிரளயமாக வெடிக்கப் போகிறேனா?
இல்லை, என் அதிர்ஷ்ட தேவதை சரியாகத்தான் சொல்வாள். நாங்கள் மூவரும் அநாதை ஆசிரமத்தை நோக்கிச் செல்கிறோம், ஆர்த்திக்கு ஒரு தம்பியைத் தத்தெடுக்க.
-மங்கையர் மலர் நவம்பர் 2008