
-பத்மா
“கல்யாணத்தில் யாரைத் திருப்தி செய்வீங்களோ தெரியாது. என் அமெரிக்கா அத்தையின் மனம் கோணாதபடி நடந்து கொள்ளுங்கள். முப்பத்தைந்து வருடங்களாக அமெரிக்காவில் வசிக்கிறார். எண்பது வயதிலும் ஐம்பது மாதிரித் தோற்றம் அவருக்கு. நம் பத்ததியை நெல்லு மூக்கு அளவுகூட விட்டுக் கொடுக்கமாட்டார். சரிகைக் கரை போட்ட பட்டுப் புடைவை மடிசாரில், வைரத்தோடு, பேசரி சகிதம் அசல் வசதியான மைலாப்பூர் மாமியாக வளைய வருவார். வெரி வெரி ஸ்ட்ரிக்ட் லேடி.
"கல்யாண விஷயத்தில் இன்னும் அதிகம். வாசல் கோலத்திலிருந்து வாத்தியார் சொல்லும் மந்திரம் வரை எந்தச் சின்னத் தப்பையும் அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். குறையிருந்தால் அதே இடத்தில் 'பட் பட்' என்று பட்டாசாக வெடித்துச் சீறுவார்." சம்பந்தி நயமாகவும் அதே சமயத்தில் கண்டிப்பாகவும் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
முன் பின் பாத்திராத அந்த அத்தையை இராமாயண மந்தரையிலிருந்து சின்னத்திரை சீரியல் வில்லிகள்வரை அவரவர் கற்பனைக்கேற்ப நாங்கள் உருவகம் செய்து கொண்டு 'சமாளிப்பு' என்ற ப்ராஜெக்டை எல்லோருமாகக் கூடி நடத்தினோம். எத்தனை விதமாக குற்றக் கண்டுபிடிப்புகள் வரலாம். அவற்றை எப்படிச் சமாளிக்கலாம் என்பதற்கான பெரிய ஒத்திகையே நடத்தினோம்.
சம்பந்தியின் அத்தை, பெரும் பணக்காரி. வாரிசு இல்லாதவர். சம்பந்தியை வளர்த்து ஆளாக்கி இந்த உயரத்திற்குக் கொண்டு வந்தவர் என்பதால் நாங்களும் மிகவும் எச்சரிக்கையாக, எல்லா ஏற்பாட்டையும் சம்பந்தி மூலம் அத்தை யிடமிருந்து 'ப்ரொசீட் ஆர்டர்' வந்த பிறகுதான் தொடங்கினோம்.