
-பரிமளா ராஜேந்திரன்
கண்விழித்த வினோத் படுக்கையிலிருந்தபடியே மணியைப் பார்த்தான். மணி ஏழாகிவிட்டது. சுவாமி அறையிலிருந்து சுகந்தமான ஊதுவத்தியின் நறுமணம் அவன் நாசியைத் தொட்டது. அம்மா பூஜை செய்கிறாள். இனி ஒன்பது மணிக்குத்தான் வெளியே வருவாள். அடுக்களையில் குக்கர் சப்தம். வழக்கம்போல கமலா காலை நேரப் பரபரப்பில், அடுப்படியில் வேலை செய்துக்கொண்டிருக்கிறாள்.
"அம்மா, என் பேனாவைக் காணோம். ப்ளீஸ், வந்து தேடித் தாயேன்" அஸ்வத்தின் குரல்.
"ஒரு நிமிஷம் கண்ணா. அடுப்பை நிறுத்திட்டு வரேன்." கமலாவின் பதில் அவன் காதில் விழுந்தது. கமலா, அஸ்வத்தை ஸ்கூலுக்குக் கிளப்பி, டிபன், சமையலை முடித்து அவளும் குளித்து, ஆபீசுக்குக் கிளம்ப வேண்டும். நேரம்
இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும். ஆனால் அதற்காக எந்த சமயத்திலும் பொறுமையைக் கைவிடாமல், அமைதியாகச் செயல்படும் கமலாவின் குணம், வினோத்தை சந்தோஷப் பட வைக்கும்.
"கமலா காபி தர்றியா?"
கணவனின் குரல் கேட்டு திரும்பியவள், "இதோ ரெடியா கலந்து வச்சுட்டேன். காபி டம்ளரை நீட்டினாள்.
பாவம் கமலா. ஒண்டி ஆளாக காலை நேரத்தில் சிரமப்படுகிறாள். இந்த அம்மா அதைப் பற்றி கொஞ்சம்கூட நினைக்காமல், காலையில் பூஜை ரூமில் நுழைந்து விடுகிறாள். ஏன், மருமகளுக்கு உதவி, ஒத்தாசை செய்யக்கூடாதா? என்ன ஒரு மனப்பாங்கு. அம்மாவை நினைக்க வினோத்துக்கு எரிச்சலாக வந்தது.
"அம்மா எங்கே? வழக்கம்போல பூஜையா?"
"ஆமாங்க. காலையில் குளிச்சுட்டு சாமி கும்பிட்டாதான், அவங்களுக்குத் திருப்தி" புன்னகையுடன் கமலா சொல்ல, மௌனமாக அடுப்படியை விட்டு வெளியே வந்தான்.
கமலாவுக்கு மனப்பக்குவம் அதிகம். அதனாலயே எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கிறது. அத்தை தனக்கு உதவி செய்ய வேண்டுமென்று அவள் எதிர்பார்ப்பதில்லை. போதாதக்குறைக்கு மாமியாரின் தேவைகளை முகம் சுளிக்காமல் பூர்த்தி செய்வாள்.