
-டி. பெத்துமாலா
"சீக்கிரம் விடியாதா? எழுந்து முதல் பஸ் பிடித்து அமுதாவின் வீட்டுக்கு ஓடிவிட மாட்டோமா?" என்றிருந்தது. "அக்கா, நீ கொஞ்சம் உடனே வரமுடியுமா? உன்னைப் பார்த்து என் கவலைகளைக் கொட்டினால்தான் என் மனம் ஆறும்'' என்று அமுதா அழுதபோது மனம் சொல்லொண்ணா துக்கத்தில் வலித்தது. ஒரு காலத்தில் அவளால் என் அம்மா, அப்பா, தங்கை, தம்பி என, எத்தனை பேரின் தூக்கம் காணாமல் போனது? படுபாவி, அந்த அளவுக்குப் படுத்தினாளே!
அம்மா, அப்பாவுக்கு மூன்று பெண்கள் நாங்கள். ஒரு தம்பி. நான்தான் மூத்தவள்; இரண்டாவது பெண் அமுதா. அப்பாவுக்கு இரும்புக் கடை. சுமாரான வியாபாரம். இரண்டாவது, மூன்றாவதாகப் பிறந்த குழந்தை களுக்கென்று எழுதப்படாத விதி ஒன்று நடுத்தரவர்க்கக் குடும்பங்களில் இருந்தது. புதுத்துணி வருடத்துக்கு இரண்டுதான். மற்றபடி நான் போட்ட குட்டையான கவுன், பாவாடை, நான் படித்துப் பழசான புத்தகங்கள் எல்லாம் அமுதாவுக்கு. சிலபஸ் மாறினால் மட்டுமே புதுப் புத்தகங்கள் கிடைக்கும். ஒரு சமயம் நான் படித்த புத்தகம் என் தம்பி வரை வந்தது.
எனக்குத் திருமணம் முடிந்தது. அதே ஊர் மாப்பிள்ளைதான். அமுதாவின் திருமண சமயம் அப்பாவுக்கு வியாபாரத்தில் கொஞ்சம் முன்னேற்றம். அதனால்கூட கொஞ்சம் நகை, சீர் செய்து சற்று வசதியான குடும்பத்தில் அமுதாவுக்குத் திருமணம் செய்தோம். அதன் பிறகு அமுதா மாறிப்போனாள். கல்யாணமான புதிதில் அவள் கேட்டதையெல்லாம் அப்பா வாங்கிக் கொடுத்தார். அதனால் எதையும் கேட்டு வாங்கிக்கொள்வது என அமுதா முடிவு செய்தாள்.