
-ஜோதிர்லதா கிரிஜா
ராமராஜன் தன் சகாக்களுடன் அந்தப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து நின்று கொண்டபோது வழக்கம் போல் சரியாக மணி ஐந்து பத்து. இன்னும் ஐந்தே நிமிடங்களில் அந்த இரண்டு பெண்களும் வந்துவிடுவார்கள். அவர்கள் வந்ததும் வழக்கமான வம்புகளை ஆரம்பிக்க வேண்டியதுதான்.
அந்தப் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெஞ்சு போடப்பட்டிருந்தது. அதன் பக்க வாட்டில் 'உபயம் - நாதமுனி மளிகைக் கடை' எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதில் ராமராஜன் வகையறாதான் அமர்வார்கள். அதில் உட்கார்ந்திருப்பவர்கள்கூட, 'இந்தப் பசங்களோடு நமக்கேன் வம்பு?' என்பதுபோல் அவர்கள் தலைகள் தெரிந்ததுமே எழுந்து அப்பால் போய் நின்றுகொள்வார்கள்.
ஐந்தே காலுக்குள் அங்கு வந்து பேருந்துக்குக் காத்து நிற்கும் பெண்களை ஏடாகூடமாக விமர்சிப்பதும், ஏதேனும் சினிமா பாடலைக் குறும்பாகப் பாடுவதும் அவர்களது வழக்கம். அந்தப் பெண்கள் நாகரிகமாக உடுக்கும் அடக்கமான பெண்கள்தான். கல்லூரி மாணவிகள் அல்லர், ஆனால் இருபதுக்குள் இருப்பவர்கள். ஒருகால் ஏதேனும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களாய் இருக்கக்கூடும் என்றுதான் அருகிலிருந்தவர்கள் நினைத்தார்கள்.
அந்தப் பெண்களும் அவர்களின் வம்புகளையும் சேட்டைகளையும் கவனிக்கவே செய்தார்கள் என்பது அவர்களின் முகக் கடுப்பிலிருந்தும், தங்களுக்குள் அவர்கள் மெல்லிய குரலில் சொற்களைப் பரிமாறிக் கொண்டதிலிருந்தும் அங்கிருந்த பார்வையாளர்களுக்குத் தெரிந்தது. ஆனால், அவர்களில் யாருமே அந்த இளவட்டங்களைத் தட்டிக் கேட்கவில்லை! 'எதற்கு வம்பு?' எனும் மனப்பான்மையே அவர்களிடம் நிலவியது.