

-ஜே.எஸ். ராகவன்
சட்டென்று நயன்தாராவாக இளைத்துவிட்ட தன் பர்ஸைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த ஆனந்த ரவி, காப்பியைக் கொண்டுவந்த சர்மிளியை விமர்சனக் கண்களுடன் எடைபோட்டான்.
தங்கமுலாம் பூசின மாதிரி நிறம். உயரமும் இல்லை குள்ளமும் இல்லை. அருள்மிகு மூக்காம்பிகை என்று பெயர் சூட்டத் தகுதியான மூக்கு. இருபத்து நாலு மணி நேரமும் இயங்கும் பண்பலை நிலையத்துத் தொகுப்பாளினியின் பிசிறு இல்லாத வெண்கலக் குரல், மடமடப் பேச்சு: சிக்கென்று உடுத்திய புடைவை. வாழைத்தண்டு கால்களில் வெள்ளிக் கொலுசு. சங்கு கழுத்து. அப்புறம்...
'ஏண்டா இதெல்லாம் போறாதா' என்ற குரல் ஆனந்த ரவிக்கு உள்ளிருந்து கேட்டது.
'போறவில்லையே' என்று முறையிடத்தான் மனோதத்துவ டாக்டர் சந்திரபோஸை அணுகி இருந்தான்.
"ஓகே. ரிலாக்ஸ். என்ன பிரச்னை, சொல்லுங்க."
"பிரச்னை என் பெண்டாட்டிதான். பேரு சர்மிளி."
சர்மிளிங்கிற பெயரால் என்ன பிரச்னை வரப்போகிறது என்று வியந்த டாக்டர், சிவப்பு சிக்னலைத் தாண்டிய வாகனத்தின் நம்பரை கிறுக்கிக்கொள்ளும் காவல் துறையின் துடிப்புடன் நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொண்டார்.
"பிரச்னையே அவதான் டாக்டர். அழகா இருக்கா, ஒத்துக்கறேன். நல்லா சமைக்கிறா. ஏப்பத்துடன் ஆமோதிக்கிறேன். ஆனா மேல் மாடி காலி. பொது அறிவு கிடையாது. இங்கிதம், நில். அதாவது ஸைபர்."
'ஹூஹூம்?' என்று சப்தம் எழுப்பி அவனை மேலும் தொடர ஊக்குவித்தார்.
"டாக்டர் ஸார், அவளுக்கு டோனி பிளேருக்கும் போர்ட் பிளேருக்கும் வித்தியாசம் தெரியாது. உத்தப்பா வேற ஊத்தப்பம் வேறன்னு புரியாது. ஹூக்ளி வேற கூக்ளி வேறன்னும் தெரியாது. சென்ஸெக்ஸுங்கிறது கெட்ட வார்த்தைன்னு அவளுடைய கணிப்பு. கொடுமை டாக்டர்!"