
-அகிலா கார்த்திகேயன்
உற்சாகமாக ஓடிப்போய் தொலைபேசியை எடுத்தாள் என் மனைவி. காலையிலிருந்து இதுவரை ஐம்பது 'கால்'களுக்கு மேல் வந்துவிட்டன. இருந்தாலும் ஒவ்வொரு 'காலு'க்கும் கால் வலிக்க ஓடி பெண்ணுக்கு வரன் கேட்டுக்கொடுக்கப்பட்டிருந்த ஞாயிற்றுக்கிழமை பேப்பர் விளம்பரத்துக்கான ரெஸ்பான்ஸ் கால்களை எதிர்கொண்டாள் என் மனைவி ஹேமா.
''ஹலோ! ஆமாம் பொண்ணுக்குத்தான் பார்க்கறோம். சதயம்னா பொருந்துமே... ஓஹோ அதுக்கென்ன பரவாயில்லே, பையன் வேண்டாம்னு சொன்னா வேலையை விட்டுடச் சொல்றோம்... அட, நன்னிலம் பக்கமா நீங்க... ரொம்ப ரொம்ப நெருங்கிட்டமே..."
ஒரு சாதகமான ஜாதகர் அகப்பட்டு விட்டதாக அகமகிழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், அது புறமுதுகிட்டு ஓடியே போனது.
''ரொம்ப சரி மாமி... லக்னோவிலே பையனுக்கு வீடெல்லாம் இருக்கறது சந்தோஷம். பையன் ஜாதகத்திலே லக்னத்திலே ராகு இருக்கா அதைச் சொல்லுங்கோ.. தேடிப் பாருங்கோ; 'ல'ன்னு போட்டு ஒரு கட்டம் இருக்கும். அதுலே கோடுகிழிச்சு 'ராகு'ன்னு எழுதியிருந்தா பார்த்துச் சொல்லுங்கோ... என்ன இல்லையா? வெரி ஸாரி... பெட்டர் லக்னம் நெக்ஸ்ட் டைம்! அடச்சே, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. என் பொண்ணு ஜாதகத்துக்குப் பொருந்தாது" ஃபோனை வைத்தவளிடம் இப்போது சலிப்பு தெரிந்தது.