
-ஆர். மாலதி தமன்
ஆஃபீசுக்கு வந்த தொலைபேசியில் என்னுடைய திருமதி மல்லியின் குரல், ஆயிரம் வாட்ஸ் ஷாக் வாங்கிய அபூர்வ சிகாமணியாய் ஒலித்தது.,
''ஏங்க... நீங்க வீட்டிலே எலி...''
''ஆமாம். நான் வீட்டுல எலி, வெளியில புலி. இதை எத்தனை தடவை சொல்லுவே? இப்ப நான் அவசர வேலையில் இருக்கேன். போனை வை!" என்று கடித்தேன் நான்.
"ஐயோ... அதில்லைங்க. வீட்டுல பெரிய எலி புகுந்துடுச்சு. உங்கம்மா பால்கனி கதவை அடிக்கடி திறந்து வைக்கும்போதே நினைச்சேன், இதான் நடக்கும்னு. நீங்க வீட்டிலே எலிப்பொறி எதையாவது பரண் மேலே பார்த்த ஞாபகம் இருக்கான்னு கேக்கத்தான் போன் பண்ணினேன்."
''பரண்ல எலிப்பொறி, கிலிப்பொறி எதுவுமில்லை!'"
"அப்ப ஆபீஸிலிருந்து வரும்போது ஒரு நல்ல பொறி வாங்கிட்டு வாங்க. எலி விழற வரைக்கும் எனக்குத் தூக்கமே வராதுங்க!" என்று போனை வைத்தாள் .
"இந்தப் பொறி ஒண்ணுதாங்க இருக்கு!" என்ற ஒரு துருப்பிடித்த கம்பியுடன் கூடிய உளுத்துப்போன டப்பாவை நீட்டினார் கடைக்காரர். ஐம்பது ரூபாய் தண்டம் அழுதுவிட்டு அதைக் கையில் பிடித்தபடி ஓடிப்போய் பஸ்ஸைப் பிடித்தேன்.
சாயங்காலம் வீடு முழுதும் 'கமகம் என மசால் வடை வாசனை. எலிக்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்டதாம்.
பொறியில் வைத்த 'எலி கோட்டா' போக, மீந்ததையெல்லாம் எங்களுக்குக் கொடுத்தாள். ஆனால் அன்றைக்கு அந்த எலிக்கு என்ன புரோகிராமோ... அன்றைக்கு வரவேயில்லை!