

-தங்கம் ராமஸ்வாமி
பார்வதிக்கு வயது ஐம்பது. நல்ல திறமையான மனுஷி. அவளுக்கு ஒரே பையன் சுந்தர். நல்ல படிப்பு, நல்ல வேலை.
பார்வதிக்கு யாரைக் கண்டாலும் குற்றம் சொல்லாமல் இருக்கமாட்டாள். பழைமையில் ஊறியவள். அவளுடைய நட்பு வட்டத்தில் சமையல், சாஸ்திரம், கைவேலை எதிலும் கைதேர்ந்தவள் என்று பேர் பெற்றவள். கர்வக்காரியும்கூட! அவள் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டு வந்த மருமகள்தான் சுமதி. எம்.எஸ்ஸி ஹோம் சயன்ஸ் பட்டம் பெற்று பாட்டு, நடனம் எல்லாவற்றிலும் கைதேர்ந்தவள்.
பெண் பார்க்க வந்த அன்று சுமதியை நடக்கச் சொல்லி, கால் ஊனமில்லையா, பேசினால் வாய் திக்காமல் இருக்கா என்றெல்லாம் பார்த்ததுடன், தலைமயிர் சொந்தமா சவுரியா, கண் சரியா இருக்கா, கான்டாக்ட் லென்ஸா என்றெல்லாம் பயங்கர செக்-அப் செய்ததுடன் அடிக்கடி திடீர் என்று சுமதியின் வீட்டிற்கும் சென்று சோதனைகள் வேறு செய்தாள்.
சுமதிக்குப் பயங்கரமான எரிச்சல். அப்படி ஒரு வரன் வேண்டாம் என்று எதிர்த்தாள். பையன் நல்ல மாதிரியாய் படிப்பு, வசதியுடன் இருப்பதால் அவர்களுக்கு விட மனசில்லை. சுந்தரும் அம்மாவின் போக்கை மிகவும் கண்டித்தான். "டேய்! நீ சும்மா இரு. உனக்கு உலக விவரம் போதாது" என்று பார்வதி அடக்கினாள். ஒருவாறு கல்யாணமும் முடிந்தது.
சுமதி அப்போதே ஒரு சபதம் எடுத்துவிட்டாள். மாமியாரை ஒரு வழிக்குக் கொண்டுவந்து கொட்டத்தை அடக்கிவிட வேண்டும் என்று. கணவன் டூர் போகிற வேலையாதலால் அவளுடைய தீர்மானத்தை நிறைவேற்ற வசதியாய்ப் போயிற்று.