
-அருள்மொழிவர்மன்
மெதுவாகத் தோளைத் தட்டினாள் அம்மா. தையல் மிஷினை நிறுத்தி விட்டுத் திரும்பினேன். "கோயிலுக்குப் போறேன்" என்றாள். தலையசைத்துவிட்டுத் தையலில் கவனமானேன். மீண்டும் காதருகே குனிந்து, "கோயிலுக்குப் போறேன்" என்று கத்தினாள்.
எனக்கு 'குப்' என்று கோபம் ஏறியது.
''நான் என்ன டமாரச் செவிடா? ஏன் இப்படிக் கத்தறே? கோயிலுக்குத்தானே? எனக்குத் திருமணம் ஆகணும்னு வேண்டிக்கத்தானே? மகராசியாய்ப் போய் விட்டு வா" - 'சுள்' என்று விழுந்தேன். அம்மா சோகமாய் நகர்ந்தாள். பாவமாய் இருந்தது. எனக்கும் எடுத்ததற்கெல்லாம் கோபம் வருகிறது.
அம்மா கோவிலுக்குப் போனதும் எனக்கு வேலை ஓடவில்லை. வழக்கமான ஜன்னல் மேடையில் போய் உட்கார்ந்தேன். என் சிநேகிதிகள் அத்தனை பேருக்கும் வரிசையாகக் கல்யாணமாகிக்கொண்டிருக்கிறது. கல்யாண மார்க்கெட்டில் நான் விலை போகாத சரக்கு. பல் எடுப்பாக உள்ள என் தோழி ஒருத்திக்கு அதிக நகை போட்டதால் அந்தக் குறை பெரிதாகப்படவில்லை. போலியோ பாதித்த ஒருத்திக்கு உடன்பிறந்தவன் வெளிநாட்டுப் பணத்தில் மிதந்தான். மாப்பிள்ளைகள் வரிசையில் நின்றார்கள். ஆனால் எனக்கு? அழகில்லை. பணம் இல்லை. விலைக்கும் வாங்க முடியாது. கத்திரிக்கோல் பிடித்துக் காய்த்துப்போன விரல்களைப் பார்த்தபடி பெருமூச்செறிந்தேன்.
அம்மா வேகமாய் உள்ளே வருகிறாள். பை நிறைய காய்கள்.
"உங்க அண்ணனையும், அண்ணியையும் கோயில்ல பார்த்தேன். ஏதோ கல்யாணத்துக்கு வந்தாங்களாம். மாமனார் வீட்டுக்குப் போய்விட்டு வரேன்னான். சாப்பிட வரச் சொல்லி இருக்கேன்."
ஆவலாய் என் முகத்தைப் பார்த்தாள். கல்லாய் இருந்தேன். அவசர அவசரமாகக் காய் நறுக்கி சமையல் செய்தாள்.
"அம்மா, பசிக்குது சாப்பிடுவோமா?"
"கொஞ்சம் இரு. மீனா. அண்ணன் வரட்டும். சேர்ந்தே சாப்பிடுவோம்" முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வாசலுக்கும் சமையலறைக்கும் அலைந்துகொண்டிருந்த அம்மாவைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. மணி பகல் மூன்றைத் தொட்டதும்தான் அம்மா, ''என்னடி, இவன் வரமாட்டானா?" என்றாள்.