
-ச. வாணி
நடுநிசிக்கு இன்னும் நான்கைந்து நிமிடங்களே இருந்தன. எங்கோ தொலைவில் நாய் ஒன்று ஊளையிடுவது அருவமாகக் கேட்டது. அறையின் மின்சார விடிவிளக்கோ அவ்வப்போது கண்களைச் சிமிட்டி, சிமிட்டி தன் இருப்பைக் காண்பித்தது. காற்றாடி தன் ஒரு சுழற்சியை முடிக்க பூமி சூரியனைச் சுற்றி வரும் காலம் ஆகும் போல! அத்தனை மெதுவாய் சுழன்றது. பத்து நாட்களுக்கு ஒரு முறையேனும் இதுபோல் ‘டிம் சப்ளை’ வருவது வழக்கம்தான். சூர்யாவுக்குக் காற்று போதாமையால் தூக்கம் கலைந்ததோடு கொசுக்கடியும் சேர்த்து எழுப்பவே தண்ணீராவது குடிக்கலாம் என நினைத்து எழ எத்தனிக்கும் சமயம்தான் அவளின் பெற்றோரான சந்திரனும், கலாவும் பேசிக்கொண்டிருப்பது செவிகளில் விழுந்தது.
“இவ ஒரு நானூறு மார்க்காவது வாங்கி இருந்தா சீட்டு கெடச்சிருக்கும். இல்ல நாமாவது தாழ்ந்த சாதியா இருந்திருந்தா கோட்டாவுலயாவது சீட்டு கெடச்சிருக்கும்... என்ன பண்றது? எதுக்கும் இல்லாம போச்சு. நாலஞ்சு வருஷத்துல ஐந்து சவரனாவது போட்டு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிருவோம். அவ தலையெழுத்து அதுதான்னு நெனைச்சிக்க வேண்டியதுதான். காலேஜ் படிப்பெல்லாம் நம்மள மாதிரி ஏழைபாழைக்கு வேண்டும்ன்னு நெனக்கிறது பேராசை கலா, விட்டுத் தள்ளு” என விரக்தியோடு தன் தந்தை சந்திரன், தாய் கலாவிடம் புலம்பியது நன்றாகக் கேட்டது.
“என்னங்க, ஏதாவது முயற்சி பண்ணிப் பாருங்க. பாவங்க சூர்யா. இவளவிட மார்க் கொறவா எடுத்த இவ ப்ரெண்ட்ஸ் ஆனந்தி, சுகந்திக்குக்கூட காலேஜ்ல சீட்டு கெடச்சிருச்சாங்க. நாலு நாள் முன்னாடிதான் கவுன்சிலிங்குக்கு வரச் சொல்லி லெட்டர் வந்ததையும், போய்ட்டு சீட்டு கெடச்சதையும் சொல்லிட்டு, சூர்யாவ விசாரிச்சிட்டு போனாங்க. புள்ள மொகமே வாடி போயிருச்சிங்க. எனக்கு மனசே கேக்கலங்க” என விசும்பத் தொடங்கினாள் கலா.