

-லலிதா சிவராமகிருஷ்ணன்
"ராதிகா, இன்று சாயந்திரம் கல்லூரியிலிருந்து சீக்கிரம் வந்துடு. இன்னிக்கு சாரதாவின் பேபி ஷவர் ஏழு மணிக்கு இருக்கிறதே! மறந்துட்டியா?" என்ற ரகுராமனை யோசனையுடன் திரும்பிப் பார்த்தாள். அமெரிக்காவில் கர்ப்பமான பெண்ணுக்கு அவளுடைய உறவுக் காரர்களும், சினேகிதர்களும் சேர்ந்து ஒரு விருந்து வைத்து, விதவிதமான பரிசுகள் கொடுப்பது வழக்கம்தான்!
''போகத்தான் வேண்டுமா?" என்றாள் ராதிகா.
''இப்படி பயந்தால் எப்படி? இவ்வளவு நெருக்கமாகப் பழகிவிட்டு இப்பொழுது முடியாது என்றால் நன்றாக இருக்காது."
"அது இல்ல, அங்கே அவளுடைய அண்ணாவும் மன்னியும் வந்திருக்கிறார்களே, அவர்களை நேருக்கு நேர் சந்திக்க எனக்குத் திராணி இல்லை."
"எப்பவோ நடந்த சம்பவங்களை நினைச்சு, வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். நீ சீக்கிரம் வந்து தயாராக இரு."
ஆயாசத்துடன் எழுந்து குளிக்கச் சென்றாள். மனம் சிறகடித்துக்கொண்டு பழைய சம்பவங்களில் மூழ்கியது. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? எத்தனை கஷ்டங்கள், ஏற்ற இறக்கங்கள். அத்தனையும் சமாளித்துக்கொண்டு இத்தனை தூரம் முன்னுக்கு வந்து, இதோ இப்பொழுது அமெரிக்காவில் கல்லூரிப் பேராசிரியையாக இருப்பது ஒரு பெரிய சாதனைதான். ரகுராமனின் அன்பும், அனுசரணையும் இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா?
