
-பத்மா
ஒரு காலத்தில் 'பளபள' என்றிருந்த தாமிரத் தவலைதான் நூற்று ஐம்பது வருட கடின உழைப்பில் பப்படமாய்த் தேய்ந்து விட்டிருந்தது.
விறகடுப்பில் ஏற்றி ஏற்றி வெந்நீர் காய வைத்த கைங்கர்யத்தில் தடிமனாகப் புகை படிந்து கறுப்புத் தவலையாகப் பெயர் மாற்றம் பெற்றுவிட்டது.
என் எண்பது வயது மாமியாருக்கு அதன் மீது அசைக்க முடியாத பலத்த பாசப்பிணைப்பு. அவருடைய மாமியார், (தொண்ணூறு வயது வாழ்ந்தவர்) பிறந்த வீட்டு சீதனமாகக் கொண்டுவந்த தவலையாம் அது! அதில் வெந்நீர் போட்டுக் குளித்தவர்கள் தீர்க்காயுசாக இருந்ததால் அதற்கு 'ஆகி வந்த தவலை' என்ற இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. கெய்சர் யுகத்தில் வெந்நீர் தவலைக்கு ஏது உபயோகம்? இடத்தை அடைத்துக்கொண்டு பரணில் உட்கார்ந்திருக்கும் தவலையைக் கடையில் போடலாம் என்றாலும் என் மாமியார் ஒப்புக்கொள்ளவே மாட்டார். "அதுபாட்டுக்கு தேமேன்னு அட்டத்தில் உட்கார்ந்திருக்கு. உங்களைச் சாப்பாடா கேட்கிறது?" என்று வாயடைப்பார்.
இந்தத் தவலையை வைக்க இடம் சரியாக இல்லாததாலேயே பல நல்ல வீடுகளைத் தவிர்த்து இந்த அரதப் பழைய வீட்டிலேயே கால் செஞ்சுரி போட்டு விட்டோம். இதை நன்றாய்த் தெரிந்துகொண்ட என் வீட்டுச் சொந்தக்காரரும் ஒரு சின்ன ரிப்பேர்கூட செய்து தராமல் வருஷா வருஷம் வாடகையை மட்டும் கூட்டிக்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில்தான் எங்களுக்குச் சொந்த வீடு யோகம் அடித்தது. வீட்டு லோன் போட்டு கவர்ன்மெண்ட் கட்டித் தரும் ஃபிளாட்களில் குலுக்கல் முறையில் முதல் மாதமே எங்களுக்கு வீடு கிடைத்தது. வாடகை கொடுத்து வீட்டுச் சொந்தக்காரரின் ஏச்சுப் பேச்சுகளுக்கு பல்லிளித்து அலுத்துப் போன எனக்குப் பெரிய நிம்மதி.