
-ஆர். பரிமளா ராஜேந்திரன்
"அகிலா, சூடா ஒரு தம்ளர் காப்பி கிடைக்குமா? தலையை வலிக்கிற மாதிரி இருக்கு."
அடுப்படியில் நுழைந்த ராகவன் கேட்க,
"இதோ தர்றேங்க" சொன்னவள், மகன் சிவாவுக்கும் மருமகள் சுமதிக்கும் மதியச் சாப்பாட்டை டிபன்பாக்ஸில் நிரப்பிக்கொண்டே பாலை அடுப்பில் வைத்தாள்.
அவசர, அவசரமாகச் சாப்பிட்டு இருவரும் வேலைக்குக் கிளம்ப, அங்கிருக்கும் சோபாவில் சாவகாசமாக வந்து அமர்ந்தாள்.
''அப்பாடா, காலை நேரத்தில் வேலை சரியா இருக்கு. இரண்டு பேரும் ஓடி ஓடி உழைக்கிறாங்க. கடவுள் இன்னும் கண் திறக்கலை. ஒரு குழந்தை பிறந்தா நல்லாயிருக்கும் ."
புலம்பும் மனைவியைப் பார்த்தார் ராகவன்.
''எல்லாம் நடக்கும் அகிலா. நல்ல நேரம் வரும்.''
பிள்ளையாரை வணங்கி, பிராகாரம் வலம் வந்தவர், எப்போதும் உட்காரும் இடத்தில் சென்று அமர, சபேசனும், உலகநாதனும் அங்கு வந்தார்கள்.
"என்ன ராகவன் சாமி கும்பிட்டாச்சா? இந்தாங்க சுண்டல்."
கையிலிருந்ததைக் கொடுத்து, அவர் அருகில் உட்கார்ந்துகொண்டார்கள்.
"அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். நம்ப சந்திரன் டூர் ஏற்பாடு பண்ணியிருக்கான். நம்ப மாதிரி வயசானவங்களுக்காக அவன் வருஷா வருஷம் டூர் அரேன்ஜ் பண்ணி கோயில்களுக்கு அழைச்சிட்டுப் போவான். இந்தத் தடவை திருப்பதி, திருத்தணி, திருவண்ணாமலை, காளஹஸ்தி, காணிப்பாக்கம் விநாயகர் கோயில் எல்லாம் கூட்டிட்டுப் போகப் போறானாம். ஒரு வாரம் நிதானமா, அவசரப்படுத்தாம, நல்லா சுத்திக் காண்பிப்பான். மொத்தம் பன்னிரண்டு பேர்தான். இதுவரைக்கும் எட்டு சீட் புக் ஆயிடுச்சு. ஒருத்தருக்கு ரெண்டாயிரம் ரூபாய். வர்றீங்களா?"
சபேசன் கேட்க, ராகவன் மனத்தில் உற்சாகம்.