
-கோதை நாராயணன்
"ஏட்டி, என்னத்த களவாடிக்கிட்டு ஓடுற?" பெரியாச்சியின் குரல் கொல்லைப்புறத்தில் எகிறியது.
"நம்ம பூவாத்தா மவ பேச்சி, கூட்டாஞ்சோறு தாரேன்னு ஆக்கித் சொன்னாளாம்: அதேன் ஒரு பிடி அரிசியை எடுத்துக்கிட்டு பாயிறா" பதிலளித்தாள் மருமகள் பார்வதி.
இந்த உரையாடல்கள் எதையுமே காதுல வாங்காமல் மூச்சிரைக்க பேச்சி வீட்டுக்கு வந்து நின்றாள் லட்சுமி.
"யக்கா! இந்தா என் பங்கு அரிசி, அங்க பெரியாச்சி அவயம் போட ஆரம்பிச்சுட்டா; தப்பிச்சுப் பிழைச்சு ஓடியாந்தேன்."
"முறத்துல போட்டுட்டு பிறவாசல்ல போய் முருங்கைக் கீரை கொஞ்சம் ஆஞ்சுட்டு வா"
''சரிக்கா!'' லட்சுமி நகர்ந்து கொண்டிருக்கும்போதே குமாரு வந்தான்.
"யக்கா! இந்தா... என் பங்குக்கு ஒரு வாழைக்கா. இரண்டு கத்தரி. நம்ம சுடலை மாந்தோப்புக்கு போயிருக்கான் மாங்கா புடுங்க!
''சரி சரி, அந்தப் பாண்டிப் பயல எங்கல காணும்? அவந்தான பருப்பு கொண்டாரேன்னான். நா உங்களுக்கு கூட்டாஞ் சோறு ஆக்கி கொடுத்துப்புட்டு பீடிக்கடைக்கு போகணும்ல? சீக்கிரம் உங்கக் கூட்டாளிகளை யெல்லாம் சேருங்க. ஆமா, நாழியாச்சு நா உலையை வைக்கேன்."
அதற்குள் சுடலை காவக்காரங்கிட்ட அடிய வாங்கிட்டு அத்தோடு மாங்காயையும் கொண்டு வந்து சேர்த்தான்.
கீரையோட வந்த லட்சுமியைப் பார்த்து, ''ஏட்டி ! நீயும் சுடலையும் அந்த வெங்காயத்தையும் பூண்டையும் உரிச்சுக் கொண்டாரணும்" என்றார் பேச்சி.
''சரிக்கா!" நொடியில் லட்சுமியும் சுடலையும் உரிக்கத் தொடங்கினர்.