
-பாலா விஸ்வநாதன்
அலுவலகத்தில், அண்ணாந்து பார்த்தபடி சோகமாக உட்கார்ந்திருந்தார் மூர்த்தி.
"என்ன மூர்த்தி சார்! பலத்த யோசனை?" என்றவாறு நுழைந்தார் சபேசன். ''ரிடையராகப் போறேனில்லை... அந்தக் கவலைதான்..." என்று விரக்தியாகப் பதில் சொன்னார்.
"அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கே?" என்று சிரித்த சபேசன், உங்களுக்கு என்ன சார்? பெண்ணுக்குக் கல்யாணம் முடிச்சாச்சு, பையன் நல்ல வேலையில் இருக்கான். வீடு, கார்... இன்னும் என்ன வேணும்?''
"ரிடையராகி வீட்டில் உட்கார்ந்துகொண்டு என்ன செய்வது? எப்படிப் பொழுதுபோகும்?"
"எத்தனை பேர் ரிடையராகி போயிருக்காங்க... நாமே முன்னே நின்னு, பார்ட்டி எல்லாம் கொடுத்து அனுப்பினோமே! அவங்களெல்லாம் என்ன செய்யறாங்க? சிலர் வேலை தேடிக்கிட்டாங்க... சில பேர் வேளாவேளைக்கு சாப்பாடு, டிபன்னு சாப்பிட்டுட்டு நியூஸ் பேப்பர் படிப்பதும், டீ.வி.பார்ப்பதுமா இருக்காங்க. இன்னும் சிலர் காலில் சக்கரத்தை மாட்டிக்கிட்டு பெண் வீடு, பிள்ளை வீடு, கல்யாணம், கச்சேரின்னு அனுபவிக்கிறாங்க..."
மூர்த்தி பெருமூச்சு விட்டார். "நீங்க ரொம்பச் சுலபமா சொல்லிட்டீங்க... ரிடையரானவனுக்கு மதிப்பே இருக்கறதில்லையே! சினிமா, டீ.வி., சீரியல்லே எல்லாம் ரிடையரானவனை, பசங்க என்ன.. மனைவிகூட அலட்சியம் செய்வதைத்தானே பார்க்கிறோம்?"
''அதுதான் உங்க பயமா? குழம்பாதீங்க மூர்த்தி சார்... உங்க மகன் உங்களிடம் வீட்டிலேதானே இருக்கீங்கப்பா... நிதானமா பேப்பர் படிக்கலாமே...'னு சொல்லி பேப்பரைக் கேட்டால் அதுலே தப்பிருக்கா? சொல்லுங்க..."
மூர்த்தி பதிலே பேசவில்லை. சபேசன் தொடர்ந்தார்... "நீங்க சமையல் ஆயிடுச்சான்னு கேட்டு, உங்க மனைவி 'இப்பக்கூட என்ன அவசரம்? ஆபீசுக்கா போகணும்? நிதானமா பசிச்சு, ருசிச்சு சாப்பிடுங்களேன்..'னு சொன்னால் அது உண்மைதானே?"
மூர்த்தி சபேசனை ஒரு மாதிரியாகப் பார்த்தார். ஆனால் மறுக்கவில்லை. ஒப்புக்கொள்ளவும் இல்லை.