சிறுகதை; மாடுலர் மாமி!
-அகிலா கார்த்திகேயன்
பத்து, பசை, எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்குப் பிடிதுணி என்ற, சமைலறைக்கு உண்டான அம்சங்கள் எதுவும் தென்படாத, இருபதடிக்கு பதினைந்தடி அளவிலான, பிரம்மாண்டமான பளபளக்கும் அறையை விசாலம் மாமி காண்பித்து, "இதுதான் மாடுலர் கிச்சன்" என்றதும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் பூஃபெயில் நுழைந்த ராப்பிச்சைக்காரியாய் மிரண்டு போனேன்.
''வுட் வொர்க்குக்கு மட்டும் மூணு லட்சம் ஆயிருக்கு " என்று விசாலம் மாமி விளக்கியபோது, ஒரு வருட காலமாய் அறுபதாயிரம் ரூபாயைப் பீறாய முடியாமல் பைபாஸ் சர்ஜரியை தள்ளிப்போட்டிருந்த என் இதயம் 'பக்பக்' என அடித்துக் கொண்டது.
விசாலம் மாமி ஸ்லோக கிளாஸ்மேட் பையன் வெளிநாடு சென்று சம்பாதித்து மேடவாக்கம் பக்கத்தில் இந்த ஃப்ளாட் வாங்கியதில் இங்கே குடிபெயர்ந்துவிட்டாள். பழைய சிநேகிதத்தை மறக்காமல் எல்லோருக்கும் ஃபோன் செய்வாள். அப்படித்தான் என்னையும் வீட்டுக்கு வா வா என்று கூப்பிட்டுக்கொண்டேயிருந்தாள். மாடம்பாக்கம் கோயில் போகலாமென்று கிளம்பி நடுவில் மாமி வீட்டுக்கு வந்திருந்தேன். வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக மாமி எனக்கு அறிமுகப்படுத்தும் முதல் இடம் மாடுலர் கிச்சன்தான்.