சிறுகதை; மனம்!
-உமா சுந்தர்
இலேசாகப் பசியெடுக்க ஆரம்பித்தது கேசவனுக்கு. காலையில் பதினொரு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பியபோது சாப்பிட்டது. இப்போது மணி மூன்று. அட்மிஷன் முடிந்து இப்பொழுதுதான் ரூம் ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். தனக்குப் பசித்தபோது 'அப்பாவுக்கும் பசிக்குமே' என்ற எண்ணம் உரைத்தது.
"பசிக்கிறதாப்பா? ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?"
"இப்ப வேண்டாம்பா. காயத்ரியே காஃபி எடுத்துகிட்டு வரேன்னு சொல்லி இருக்கா.'
இதற்கு கேசவன் பதில் சொல்லவில்லை. காஃபியின் மீது அப்பா உயிரையே வைத்திருக்கிறார் என்றும், கேன்டீன் காஃபி நிச்சயம் அவருக்கு பிடிக்காதென்றும் தெளிவாக அறிந்துதான் காயத்ரி இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தாள்.
அப்பா அந்த நாளிலிருந்தே, தன் விருப்பத்துக்காக யாரையுமே வற்புறுத்த மாட்டார். ஆனால், அம்மாவுக்கு எப்படித்தான் தெரியுமோ தெரியாது!
அப்பாவின் விருப்பங்களை இம்மியும் பிசகாமல் (அவர் கேட்காமலேயே! அதுதான் முக்கியம்) நிறைவேற்றிவிடுவாள். அம்மா போனபிறகு அப்பா ரொம்பவும் ஒடுங்கித்தான் போய்விட்டார். என்னதான் காயத்ரி மகளைப்போல் கவனித்துக்கொண்டாலும் அம்மா இல்லாத வெறுமை அவரை தாக்கத்தான் செய்தது.
அது ஒரு பெரிய தனியார் கண் மருத்துவமனை. அப்பாவுக்கு கண்புரை வந்து இரண்டு கண்களிலும் பார்வை மங்கிவிட்டது. பாவம், கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக சிரமப்பட்டு வந்தாலும், வாயைத் திறந்து, ''ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்றியா?" என்று ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. கேசவனும் என்னதான் செய்வான் ? ஒற்றைச் சம்பளம். மாதாந்திர செலவே மென்னியைப் பிடிக்கும் வேளையில் கண் ஆபரேஷனுக்குப் பணம் ஒதுக்குவது பெரும் பாடாக இருந்தது.