
-கண்ணம்மாள் பகவதி
"இந்தா மரில்லா! இங்க வா! வந்து பாரு இந்த அநியாயத்தை!”
முகம் பூராவும் சிவந்து கிடக்க, மாடிப்படி வாசலுக்குப் போய் மாடியைப் பார்த்து கோபத்தோடு சத்தம் போடுகிறாள் பாண்டியம்மா.
தையல் மிஷினில் தைத்துக்கொண்டிருந்த மரில்லா ஜோன்ஸ், அந்தக் குரலைக் கேட்டதும் 'அப்படித்தான் இருக்கும்' என்ற பதைப்புடன் எழுந்து பால்கனி வழியாய் கீழே எட்டிப் பார்க்கிறாள். அப்படியேதான்! கையில் காலி அலுமினியப் பால் சட்டியோடு அவளை நிமிர்ந்து பார்த்து,
"பாரு! அரைப்படி பாலு... கள்ளிச் சொட்டு கணக்கா காச்சி, ஒரு மடக்குக் கூட காப்பிக்கு எடுக்கல... அது வயித்துல வண்டு கொடய! ஒரு சொட்டுல்லாம அம்புட்டையும் குடிச்சுப்புட்டு போயிருக்கு களவாணிப்பய பூனை!''
''அச்சச்சோ!" வேறு என்ன சொல்வதென்று தெரியாமல் திகைக்கிறாள் மரில்லா.
"நல்லா பூனை வளத்தே! அங்கிட்டு இங்கிட்டு ஒரு நிமிசங்கூட அசர முடியல. களவாணிப் பய பூனை வரட்டும். கம்பெடுத்து ஒரே சாத்தா சாத்தி காலை ஒடிக்கிறேம்பாரு!"
''ஆன்ட்டி, ப்ளீஸ் ! பாலை அப்படியே வைக்காதீங்க. அலமாரில வச்சு பூட்டிடுங்க" என்று தயவாய் இறைஞ்சுகிறாள் மரில்லா ஜோன்ஸ்.
"ஆமா, பொட்டியில வச்சு பூட்டுறேன் பால் சட்டிய! நல்லாத்தான் யோசன சொல்றபோ! பூனைய மருவாதியா ரயில் ரோட்டில் கண் காணாம வுட்டுப்புட்டு வரச் சொல்லு. இல்ல கட்டிப் போட்டு வளர்த்துக்கோ. இன்னமே அந்தக் பூனை உள்ள வந்துச்சு, தாச்சண்யமில்ல சொல்லிட்டேன் ... ஒரே போடுதான். அப்புறம் எம்மேல சங்கடப்பட்டுக்காதே! ஆமா சொல்லிட்டேன்."