சிறுகதை; மூடு பல்லக்கு!
-எஸ். கமலா இந்திரஜித்
கார் அந்த நட்சத்திர ஹோட்டல் முன் நின்றது. சுதாகர் காரை நிறுத்திவிட்டு வரும்வரை பார்வையை சுழல விட்டேன். டவாலியும், விசிறி மடிப்புத் தொப்பியும் அணிந்த வாயிற்காவலன் மடிந்து வணங்கி நெற்றியில் ஜவ்வாது வைத்து உள்ளுக்கு அனுப்பினான். பெரிய ஹாலைத் தாண்டி திறந்தவெளி. ஒருபுறம் நீச்சல் குளம். ஒட்டியே பெரிய புல்வெளி. அங்கங்கே நாற்காலி மேசைகள். சீராக வெட்டப்பட்ட மரங்களிலிருந்து வெளிச்சமும், இசையும்...
"இந்த மாதிரி இடமெல்லாம் எனக்குப் பழக்கமே இல்லை" என்றேன்.
"இதையெல்லாம் எப்பத்தான் அனுபவிக்கிறதாம்? என்ஜாய்!" என்று சொல்லி பேரரிடம் என்னவோ கொண்டு வரச் சொன்னான்.
"நீ ரொம்பத்தான் மாறிட்டே. உன்னை மாத்தினது சம்பளமா, இல்லை பங்களூருவின் புதுக்கலாச்சாரமா? எது?" என்ற என் கேள்விக்கு பதில் சொல்லாமல் மையமாய்ச் சிரித்தான் அங்கங்கே மேசைக்கு மேசை கூட்டம் குழும ஆரம்பித்தது.
திடீரென்று அறிவிப்பு ஒலிக்க புல்வெளி முழுவதும் நிச்சலனமானது.
"என்ன சுதாகர்?" என்றேன் நண்பனிடம் சன்னமாய்.
"காமினி ஆடப்போறா இப்போ. பார்த்ததில்லையே நீ? அசந்துடுவே!"
உண்மைதான். அரபுக்குதிரை போல் அத்தனை வளர்த்தி. செழுமையான உடல்வாகு. தாழம்பு நிறமும், மேடும், சரிவுமாய் அப்படி ஒரு வடிவழகு. முதுகைக் காட்டிக்கொண்டு எதிர்ப்புறம் வணங்கிக் கொண்டிருந்தவள், எங்கள் பக்கம் திரும்பியதும் அதிர்ந்தேன்.
அது ஈஸ்வரி...காமேஸ்வரி. காமேஸ்வரியேதான். வேறு யாருக்கு வரும் இத்தனை ராஜ களையும், கம்பீரமும்?
சரேலென என் நினைவு பெங்களூரைவிட்டு அகன்று, மணமங்கலத்தை நோக்கிச் சென்றது.
எங்கள் கிராமத்தின் விசாலமான அழகுத் தெரு எதுவென்றால், எல்லா ஊரையும்போல் சன்னதித் தெருவைத்தான் சொல்ல வேண்டும். கிழக்கே சிவன் கோவிலிலிருந்து ஆரம்பிக்கும் வீதி, நீள, அகலமாய் தொடர்ந்து பெருமாள் கோவில் பக்கத்தில் போய் முடியும். அந்தத் தெருவின் அழகுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் மேலக்கோடியில் தெற்கு பார்த்து பிரம்மாண்டமாய் இருக்கும் அரண்மனை.