

-சீதாராம்
"குழந்தை மருமகள் அபூர்வா சாயலில்தான் இருக்கும்போல் தெரிகிறது" இட்லி விள்ளலை மிளகாய்ப் பொடி குவியலில் தோய்த்தவண்ணம் மூர்த்தி தன் கருத்தை வெளியிட்டார். பார்வை மட்டும் மோட்டு வளையில் பதிந்திருந்தது.
முப்பது வருட தாம்பத்திய வாழ்க்கையில் அவரது குணாதிசயங்களை மனைவி பார்வதி நன்கு அறிந்தவள். நேருக்கு நேர் முகம் பார்த்து என்றும் அவர் பேசியதில்லை.
"பால் குடித்து சிறிது ஊறி வளர்ந்தால்தான் சரிவரச் சொல்ல முடியும்" என்றபடி மேலும் இரண்டு இட்லிகளை அவர் தட்டில் வைத்தாள்.
பார்வதியின் குரலில் அதிக கரத்தில்லையோ என்று மூர்த்திக்குத் தோன்றியது! தம்பதிகள் இருவரும் ஒரே மகன் ஜெயராமின் குழந்தையை மருத்துவமனை வரை சென்று பார்த்து விட்டும் திரும்பியிருந்தனர். திருமணமாகி ஒரு வருடத்தில் பேரனும் பிறந்துவிட்டான். இருந்தபோதிலும் பார்வதியிடம் அதிக முகமலர்ச்சியில்லை.