
என் மனைவி சசி, மகள் வித்யா, மகன் சபரீஷ் எல்லோரும் தூங்கிவிட்டார்கள். விடிந்தால் தீபாவளி. என் குழந்தைகளுக்கு தீபாவளி கொண்டாடுவது என்பது மிகவும் சந்தோஷத்திற்கு உட்பட்ட விஷயம். காலையில் விடியும் முன்பே எழுந்து குளித்துவிட்டு புத்தாடை உடுத்தி பட்டாசு விடுவது என்றால் அலாதி பிரியம்.
எனக்கு தூக்கம் வரவில்லை..
பட்...பட்...பட்...டப்...டப்...டப்...!
பட்டாசு தூரத்தில் வெடித்துகொண்டு இருந்தது...
மணி 11.30. எனக்கு போன வருட தீபாவளி ஞாபகத்திற்கு வந்தது. நாங்கள் இப்போது இருக்கும் வாடகை வீட்டிற்கு வந்து 7 வருடங்கள் ஓடிவிட்டன. நான் மத்திய அரசு தொலைப்பேசி துறையில் பணியாற்றுபவன். இன்னும் சில வருடங்கள் தான்... பிறகு கட்டாய ஓய்வு ! நாங்கள் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து வருடா வருடம் தீபாவளி அன்று ஒரு இளம் பெண்...
டங்...டங்...டங்...டொயிங்...டொயிங்...டொயிங்...
என மணியடித்து விட்டு...
அம்மம்மாவ்வ்....அய்ய்யாவ்வ் ...என்று ராகத்துடன் யாசித்து வருவாள். அவளை நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை. தீபாவளி அன்று மட்டும் பலகாரம் கேட்க வருவாள்.