
-கீதா பென்னெட்
"அம்மா... தோசை ரெடியா? என் கழுத்தைக் கட்டிக்கொண்டபடியே கேட்டாள் என் பெண் பாமினி. வருகிற ஆவணியில் பதினேழு முடிந்து பதினெட்டு ஆரம்பிக்க போகிற டீன்.
"குட் மார்னிங் அம்மம்மா..." அவள் காலை வணக்கம் சொன்னது என்னுடைய பாட்டிக்கு. அதாவது அவளுக்குக் கொள்ளு பாட்டி, சமையல் அறையிலேயே தரையில் ஒரு மணை போட்டு, அதன்மேல் அமர்ந்துகொண்டிருந்தவருக்கு இரும்புத் தோசைக் கல்லில் தோசை வார்த்து போட்டுக்கொண்டிருந்தேன்.
பாமினி அதைப் பார்த்துவிட்டு "ஏன் அம்மாவை இப்படி படுத்தறே? உனக்கு இன்னும் உங்கக் காலத்து இரும்பு தோசைக் கல்லில்தான் பண்ணணுமா? நான்ஸ்டிக்லே பார். ஜோரா மெல்லிசா எண்ணெயே விடாம வார்க்கலாம். மம்மி... எனக்கு நான்ஸ்டிக்லே பண்ணிக்கொடு ஒரு துளி எண்ணெய்கூட விடக்கூடாது. ஓகே?" என்றாள். பாமினிக்கு வருடத்தில் முன்னூற்று அறுபத்தி ஐந்து நாட்களும் டயட்தான்.
கோகிலா பாட்டியிடம் இருந்து உடனே பதில் வந்தது. "ஐய... உடம்பிலே இரும்புச்சத்து வேண்டாமா? அதுக்குத்தான் இரும்பு தோசைக்கல், இரும்பு வாணலின்னு உபயோகிக்கணும். இல்லேன்னா டாக்டர் 'அனீமிக்'னு எழுதிக்கொடுப்பான். காசைக் கரியாக்கி டானிக்கா வாங்கி உள்ளே தள்ளணும். அத்தோட எண்ணெய் விடாம தோசையா? யாரு அதை திங்கறது?சாப் பாட்டிலே கொஞ்சம் எண்ணெய் சேர்க்கணும்.
"உன் வயசிலே என் கன்னமெல்லாம் அப்படியே பளபளன்னு இருக்கும். உன் முகத்தைக் கண்ணாடியிலே பாரு. இதோ இப்பவே முகமெல்லாம் மொறமொறன்னு வறண்டுகிடக்கு."