
-அருள்மொழிவர்மன்
"சுந்தரி, எங்க அத்தான் இறந்துவிட்டாராம். உடனே கிளம்பு" ஜவுளிக் கடையிலிருந்து வேர்த்து விறுவிறுத்து வந்து நிற்கிறார் இவர். பிள்ளைகளை என்ன செய்வது? திகைக்கிறேன்.
"சும்மா பேசிட்டு நிற்காதே கிளம்பு" எரிச்சலுடன் கத்தினார்.
"சரி... சரி, கொஞ்சம் இருங்க. குழந்தைகளை அடுத்த வீட்டில் கொண்டு போய் விட்டு வருகிறேன்" நான் வருவதற்குள் இவர் பெட்டிகளைத் திறந்து துணிகளை எல்லாம் கலைத்துப் போட்டு...
"என்னங்க, இப்படி கலைச்சுப் போட்டிருக்கீங்க?'
"ஊருக்குப் போறதுக்கு துணி யெல்லாம் எடுத்து வச்சேன்."
நடுத்தரக் குடும்பத்தில் நித்திய தரித்திரம்தான். துணிகள் வைக்க நல்ல சூட்கேஸ் இல்லை.
"அடுத்த வீட்டில் பை கேளேன்."
"வேண்டாங்க. அவ ஆயிரம் தடவை யோசிப்பாள்."
பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும், "செலவுக்கு என்ன செஞ்சீங்க?" என்றேன்.
"செய்யறதென்ன? சங்கரனிடம் இருநூறு ரூபாய் கைமாத்து வாங்கினேன். சம்பளம் வந்ததும் கொடுக்கணும்.''
"சம்பளத்துக்கு ஏற்கெனவே ஏகப்பட்ட செலவு காத்திருக்கு. வயிற்றைக் கலக்கியது. கடவுளே!
பஸ்ஸில் கூட்டமில்லை. இந்தப் பிள்ளைகள் வந்திருந்தால் ஜன்னல் பக்கம் உட்கார்ந்தபடி வேடிக்கையாவது பார்க்கும். பாவம், அதுகளும் எங்கேதான் போகுது? ம்...
இவர் கண்ணை மூடி சாய்ந்திருக்கார். அத்தான் இறந்த வருத்தம்! இவர் கூடப் பிறந்த மூன்று அண்ணன், இரண்டு அக்கா அத்தனை பேரிலும் இந்த அக்காதான் மூத்தவர். கணவனும், மனைவியும் பெரிய பதவிக்காரர்கள். நல்ல வசதி. பிள்ளையில்லை. கல்யாணமாகி இத்தனை வருடத்தில் அக்காவும், அத்தானும் எங்கள் வீட்டுப் படியை மிதித்ததில்லை. அவர்கள் மட்டுமா? இவர் கூடப் பிறந்த எல்லோருமே வசதியாய் பெரிய வேலையில் இருக்கிறார்கள். யாருமே என் வீட்டுக்கு வந்ததில்லை. இவர்தான் எல்லா விசேடங்களுக்கும் ஓடுவார்.