
-எஸ். லக்ஷ்மி
"என்னங்க! இது எவ்வளவு அழகாயிருக்கு பாருங்களேன் " என்று வசந்தி என்னை அழைத்ததும், கடைக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த நான் உள்ளே நுழைந்தேன். அடிக்கடி சுந்தரா ஹாலில் நடக்கும் கலைப்பொருள் கண்காட்சிதான் அன்றைக்கும் நடந்துகொண்டிருந்தது. 'ஆர்ட் பீஸ்' என்ற பெயரில் ஏகவிலைக்கு விற்கும் பொருட்களை ரசிக்கும் மனோபாவமும், அவற்றை வாங்கும் எண்ணமும் எனக்கு என்றுமே இருந்ததில்லை. அதனால்தான் உள்ளே நுழைய விருப்பமின்றி வெளியே நின்றிருந்தேன்.
ஆனால் வசந்தி அதற்கு நேர்மாறானவள். எதைப் பார்த்தாலும், "இது எவ்வளவு அழகாயிருக்கு? இதை வாங்கட்டுமா?" என்பாள் கெஞ்சலாக! நான் உள்ளே நுழையும் வரையில் பொறுக்காத அவள், என்னை இழுத்துக்கொண்டு சென்று அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பீங்கான் சட்டியைக் காட்டினாள். வழக்கமாகத் தென்படும் பூந்தொட்டிபோல் இல்லாமல், அது மிக அகலமான வாயகன்ற பீங்கான் சட்டியாகக் காணப்பட்டது. பளீரென்ற வெண்மை நிறத்தில், நீலவண்ணப் பூக்களும், இலைகளும் வரையப்பட்டிருந்த அந்தப் பீங்கான் சட்டி அவளை மிகவும் கவர்ந்துவிட்டது. வழக்கமாக இதெல்லாம் காசுக்குப் பிடித்த கேடு என்று எண்ணும் நானே அதன் அழகை, மென்மையை ரசித்தேன்.
"செம அழகு இல்லீங்க!" என்று அவளது விழிகள் வியப்பில் அகல விரிந்தது இன்னும் அழகாக இருந்தது. "மேடம்! இது அபூர்வமான சைனீஸ் பௌல்! ஒரிஜினல் சைனா போர்சலின் மெட்டீரியல்! ரொம்ப ரேர் பீஸ்!" என்று அவளை உசுப்பிவிட்டார் சேல்ஸ்மேன்.