
-சாருமதி பாஸ்கரன்
ஊரில் வைகுண்ட ஏகாதசி விழா. அர்ச்சனாவை வரச்சொல்லி, அண்ணாதான் கடிதம் போட்டிருந்தார். கூடவே அண்ணியும்! அர்ச்சனா இந்த வருடமாவது ஸ்ரீரங்கத்துக்கு வந்தேயாக வேண்டும் என்று மீனுவும் பிடிவாதம் பிடித்திருந்தாள்.
அர்ச்சனாவுக்கும் போக ஆசைதான். ஆனால் தன் லட்சியத்தை முடித்துவிட்டல்லவா ஸ்ரீரங்கத்து மண்ணை மிதிப்பதாகச் சவால் விட்டு விட்டு வந்திருக்கிறாள்! தான் சாதிக்க வேண்டிய சிகரத்தைத் தொட்டுவிடத்தானே இந்த இரண்டு வருடங்களாக இரவு பகல் பாராது, பசி தூக்கம் இழந்து அலைந்துகொண்டிருக்கிறாள்!
ஸ்ரீரங்கம்! பெயரைச் சொல்லும்போதே பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாளின் பிரம்மாண்டமான உருவம்தானே நினைவுக்கு வருகிறது. ஸ்ரீரங்கத்துக் கோயிலுக்கருகிலேயே அர்ச்சனாவின் வீடும், கிருஷ்ணாவின் வீடும் எதிரெதிரே இருந்தன. இரண்டு குடும்பங்களும் ஒற்றுமை என்பதாலும், சிறு வயது முதலே பள்ளி, கல்லூரி என்று ஒன்றாகவே படித்ததாலும் அர்ச்சனாவும், கிருஷ்ணாவும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். படிப்பில் மட்டுமல்ல. கவிதை, கட்டுரை என்று போட்டி போட்டுக்கொண்டு எழுதுவார்கள்.
இருவருக்குமே வானவியல் பாடத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. செவ்வாய்க் கிரகத்தைப் பற்றி ஆராய்ந்து, அதைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்கவேண்டும். அழிந்துகொண்டிருக்கும் நாட்டுப்புறக் கலைகளைப் பற்றிய தொகுப்பை எழுதிப் புத்தகமாக வெளியிட வேண்டுமென்று, இருவருக்குள்ளே ஓர் ஆரோக்கியமான போட்டியே இருந்தது எல்லோருக்கும் தெரியும்.