
-நாமக்கல் எம்.வேலு
நாமக்கல் போய்விட்டு நான்கு நாட்கள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால் பாத்ரூம் ஜன்னலில் ஒரு கூடு. அதைக் கண்டவுடன் அதிர்ந்து போன மல்லிகா கணவனை அவசரமாய் அழைத்தாள்.
வந்து பார்த்தான் சோமு. ஜன்னலில் இரண்டு கண்ணாடிகளுக்கும் இடையில் கிரில் கம்பிமேல் அந்த கூடு இருந்தது.
“பாருங்க... நாலு நாள் வீட்டுல ஆள் இல்லை. இதான் சமயம்னு வந்து காக்கா கூடு கட்டிட்டு போயிருக்கு” என்றாள்.
“ஏ மண்டு மண்டு... காக்கா எல்லாம் மரங்கள்லதான் கூடு கட்டும். இது எனக்குத் தெரிஞ்சு புறாவோட வேலையாத்தான் இருக்கும்” என்று சிரித்தான்.
“பறவைங்க பாவம்னு, நீ மொட்டை மாடில கிண்ணத்துல தண்ணி வைக்கிறே... இதுல சாதம், பிஸ்கட், முறுக்கு வேற. அதுங்க வந்து சாப்பிட்டிட்டு தண்ணியைக் குடிச்சுட்டு கூடும் கட்டிட்டு போவுதுங்க...”
“இருக்கும்ங்க... எனக்கு இப்போத்தான் புரியுது. அப்போல்லாம் காக்கா குருவிங்கத்தான் வந்து தண்ணி குடிக்கும். கொஞ்ச நாளா ரெண்டு புறாக்களும் வருது. அதுங்கத்தான் இந்த வேலை பண்ணியிருக்கும்னு நினைக்கிறேன். அந்த ரெண்டும் சேர்ந்துக்கிட்டு ஜன்னல்ல வந்து கூடு கட்டியிருக்குங்க பாருங்களேன்...” என்றாள்.
“மக்கு மக்கு... ரெண்டும் சேர்ந்து கட்டாது. எப்போவும் ஆண் புறாத்தான் கூடு கட்டும். பெண் புறா அதுல வந்து முட்டை போடறதோட சரி” என்று சிரித்தான்.
அப்போதுதான் பார்த்தாள், ஃப்ளஷ் டேன்க் மூடி மேல் குச்சி கூளங்களும், இறக்கை முடிகளும் கிடந்தன. “பாருங்க. இதுங்க தினம் வந்து கூடு கட்டி டேன்க் மூடியையே நாசம் பண்ணியிருக்குங்க...” என்றவள், கொஞ்சம் மூச்சை இழுத்துப் பார்த்துவிட்டு, “லேசா நாத்தம் வேற அடிக்குதுங்க... போயி அந்த பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்து வந்து போட்டு கூட்டை லாவகமா எடுத்துக் கொண்டு தூர எறிஞ்சுட்டு வாங்க” என்றாள்.