
தெலுங்கு மூலம்: அப்பூரி சாயாதேவி
தமிழில்: சாந்தா தத்
"உன் புரட்சிக்கருத்துக்களால் என்னைக் கொல்லாதேம்மா..." சிடுசிடுத்தாள் சுஜனா.
கடும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய்விட்டது எனக்கு. நான் பெற்று வளர்த்த பெண்ணா இவள்...?
மூக்கு முழி, முக அமைப்பு என அச்சாய் அப்பாவைக்கொண்டிருந்தாலும் சுபாவத்தைப் பொறுத்தவரை சுஜனா என் சாயல்தான் என்றல்லவா நினைத்திருந்தேன்.
இளம்வயதில் நானும் இப்படித்தான் எதற்கும் வம்பு செய்வேன்.
"இவ என்ன இப்படி ஆம்பிளையாட்டம் தயாராயிட்டிருக்கா... இவளை எப்படி வழிக்குக் கொண்டுவரதுன்னே தெரியலே..." என்று அம்மா புலம்புவாள்.
''உன்னை வழிக்குக் கொண்டுவர முடிந்ததா என்னால்?" அப்பா சிரித்தபடி சொன்னாலும் எனக்கான பரிவு தெரியும் அதில்.
அண்ணனைப்போல் என்.ஸி.ஸியில் உறுப்பினராக ஆசைப்பட்டபோது என் ஆர்வத்திற்குத் தடைச்சுவரானாள் அம்மா.
"பொம்பளைப் பசங்களுக்கு அதெல்லாம் அவசியமில்லே" என்று தடுத்துவிட்டாள்.
எங்களிருவரிடையே இவர்களுக்கு ஏன் இத்தனை பாரபட்சம் என வருத்தமாக இருக்கும். பல நேரங்களில் என் குமுறல் வெடித்து வெளிச் சிதறிவிட, அண்ணனைப்போலவே என்னையும் நடத்தவேண்டும் எனச் சண்டைபோடுவேன்.
''அவள் ஆம்பிளைப் பையண்டி..." என்னை அடக்க அம்மா பயன்படுத்தும் ஒரே தாரகமந்திரம் இது.
சாப்பிட்டு முடித்தவுடன் என்னைத்தான் சுத்தம் செய்யச்சொல்வாள். எச்சில்தட்டை அப்படியேவிட்டு அவன் எழுந்து கைகழுவச் சொல்லும்போது ஒரு வார்த்தை கடிந்துகொள்ளமாட்டாள்... அது சகஜம்தான் என்பதுபோல்.
இதையெல்லாம் பார்க்கப்பார்க்க என்னுள் பிடிவாதம் வளர்ந்தது. ஒவ்வொரு விஷயத்திலும் அண்ணனுடன் போட்டி போட ஆரம்பித்தேன். சொல்லப்போனால் அண்ணன் என்றால் மிகவும் பிடிக்கும் எனக்கு. அவனைப்போலவே நானும் ஆக வேண்டும் எனும் என் ஆழ்மன விழைவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.