

-எம்.எஸ். பெருமாள்
"இனிமேல் ஒன்னை 'அப்பா'ன்னு கூப்பிடக் கூடாதாப்பா..." - பத்து வயது பாபுவின் கேள்வியில் ஏக்கம்... எதிர்பார்ப்பு... ஏமாற்றம்.
தலையை மழுங்க மொட்டையடித்துக்கொண்டு ஆற்றில் முழுக்குப் போட்டுவிட்டு ஈர வேட்டியுடன் படியேறி வரும் சிவசங்கரன், மகனை ஒரு விநாடி பரிவுடன் பார்க்கிறார்... மறுகணமே மனத்தைப் பாறையாக்கிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம்...
"புள்ளை கேக்கறதுக்குத்தான் பதில் சொல்லமுடியாது... இப்பவே நீ பாதி சந்நியாசி...! எனக்கு நின்னு பதில் சொல்லிட்டுப் போ ஐயா! ஒன்னைப் பெத்தவ நானாவது ஒன்னை 'ஐயா... ராசா... எங் கண்ணு'ன்னு கூப்புடலாமா கூடாதா?"
"நினைச்சுக்கலாம்... ஆனா அப்படிக் கூப்பிடக்கூடாது. சொந்தங்களைத் துறப்பது மட்டும் சந்நியாசம் இல்லே, சொந்தங்களும் இந்தக் கட்டையைத் துறக்க வேண்டும். அதுதான் முழுமையான துறவு..." என்று துறவின் இலக்கணத்தை அழுத்தமாகக் கூறிவிட்டு உள்ளங்கையில் விபூதியைக் கொட்டிக் குழைத்து 'ஓம் நம சிவாய, சிவாய நம' என்று உச்சரித்தபடி நெற்றியில், புஜங்களில், மார்பில் பட்டை பட்டையாகத் தீற்றிக்கொள்கிறார்... கண்களை மூடித் தியானம் செய்கிறார். மூடிய கண்களுக்குள்ளே மகனின் முகம் வந்து நிற்கிறது.