
-என். சியாமளா
காலை ஒன்பது மணிக்குள் அந்தச் செய்தி கிராமம் முழுவதும் காட்டுத்தீபோல் பரவிவிட்டது.
சரவணனுக்கு வேலை போய்விட்டது. அவன் வேலை பார்த்து வந்த ஓமன் வங்கியில் வேலை நீட்டிப்புச் செய்ய மறுத்துவிட்டார்கள். கடந்த ஒரு மாதமாக, வீகேயார் எனப்படும் வி.கே. ராவ் தயவில் கிடைத்த ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டிருக்கின்றான், மஸ்கட்டில்.
இனிமேல், மாதந்தோறும் நூறு ரியால், அப்பாவுக்கு அனுப்பமுடியாது. வங்கியில் பணம் ஏற ஏற, நெஞ்சில் இறுமாப்பும் ஏறிக்கொண்டிருந்த வையாபுரிக்கு ஓர் இடி என்பதோடு தாங்கமுடியாத அவமானம் வேறு.
தண்டாங்கோரை, கொக்காலடி, தோப்புத்துறையிலிருந்து, பெண் கேட்க வரும்படி சொல்லியனுப்பிய பணக்காரக் குடும்பங்களுடன் இனி சம்பந்தம் பேசமுடியாது.
முந்தைய நாள் மயிலாடு என்.சியாமளா துறை ஜங்ஷனில் 'சோழ'னிலிருந்து இறங்கிய விநாடி முதலே சரவணன் முகத்தில் சோகம் கப்பியிருந்ததைக் கண்டுகொண்டான் கண்ணுசாமி. டாக்ஸியில் ஏறி உட்கார்ந்து, அரைமணி நேரமாகியும் உற்சாகமாகப் பேசவில்லை.
ஆதிச்சபுரம் இன்னும் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது, காரை நிறுத்தச் சொல்லி, சாலையோரத்திலிருந்த ஓர் அய்யனார் கோயில் மேடைக்கு அழைத்துப் போனான் சரவணன்.
"கண்ணு... ஒரு அதிர்ச்சி செய்தி சொல்லப் போறேன் ... நீ தாங்கிக்கணும்..."
கண்ணுசாமி எதிர்பார்த்ததுதான்.
"நான் வேலை பார்த்த ஓமன் வங்கியில், கான்டிராக்டை நீட்டிக்கவில்லை. அந்த நாட்டு மக்களுக்கே -ஓமானியர்களுக்கே - முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில், என் இடத்தில் ஓர் ஓமானியனைப் போட்டுவிட்டார்கள்...'
"அப்போ ஒருவழியா மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறதுதானே?"
"அதுக்குத்தாண்டா, மனசு இடங்கொடுக்கலே... வேற நல்ல வேலை கிடைக்குமோன்னு நப்பாசை..."