

-வசுமதி கிருஷ்ணசாமி
அலமு வாசலுக்கும், உள்ளுக்கும் போவதும், கேட்டின் வெளியே எட்டிப்பார்ப்பதுமாக, நிலைகொள்ளாமல் பரபரத்துக்கொண்டிருந்தாள். அப்பா சேஷாத்ரியோ ஹாய்யாக, டீவி பார்த்துக்கொண்டு, உலகத்தையே மறந்திருந்தார்.
ராகினிக்கு, எதுவுமே பிடிக்கவில்லை. ''அக்கா, இது எத்தனாவது இன்டர்வ்யூ?" ரம்யா கண்ணடித்தபடி, கிண்டல் செய்தாள்.
''எனக்கு மறந்து போச்சுடி. செஞ்சுரி அடிச்சுட்டேனா என்னவோ? போ! போதும் இந்த நாடகம்னா இந்த அம்மா கேட்கவே மாட்டேங்கறாளே!" அலுத்துக்கொண்டாள் ராகினி.
அக்கா ராதிகாவோ, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு, 'உம்' என்றிருந்தாள். அவள் மடியில் தலைவைத்துக் கொண்டு ராஜுவும், உஷாவும் படுத்திருந்தனர். புருஷனோடு சண்டைப் போட்டுக்கொண்டு பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள் அவள்.
வாசலில் மோட்டார் சைக்கிள் சப்தம் கேட்டது. பை நிறைய பழங்கள், பலகாரங்களுடன் வந்தான் கோபு.
"அக்கா, எல்லாத்தையும் எடுத்துத் தட்டில் வை. அவங்கள்லாம் வந்துட்டாங்க" என்றான்.
"வாங்க, வாங்க!" என்றபடி வாயெல்லாம் பல்லாக, வந்தவர்களை வரவேற்றாள் அலமு.
பெண் பார்க்கும் படலம், பலகாரங்கள் உபசரிப்பு, பேச்சுப் பரிமாற்றம் எல்லாம் கச்சிதமாக வழக்கப்படி நடந்தது. ஒரு வழியாக பிள்ளை வீட்டார் திரும்பினார்கள். இந்த வரனும் தட்டிப் போயிற்று.
"அம்மா, இதுதான் என்னோட கடைசி இன்டர்வ்யூ. இனிமேல் இந்த இழவெல்லாம் வேணாம். எனக்குக் கல்யாணமும் வேணாம், கருமாதியும் வேணாம்" கோபத்துடன் கத்தினாள் ராகினி.
''ஆமாண்டி. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன சுகத்தைக் கண்டேன்? நீயாவது, சுதந்திரமா, சந்தோஷமா இரு" இது ராதிகா.