
-லதா சேகர்
எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. வறுமை என்றால் அப்படி ஒரு வறுமை. சாப்பிட ஒன்றுமே இருக்காது. அப்படியே ஏதேனும் உணவு சமைத்தால்கூட தன் பங்கு சாப்பாட்டையும் எனக்கு ஒதுக்கி 'நீ சாப்பிடு... எனக்கு இன்னைக்கு என்னமோ பசியே இல்ல' என்பாள். இது என் அம்மாவின் முதல் பொய்.
வீட்டின் அருகில் குளம். அதில் மீன் பிடிப்பது அம்மாவின் வழக்கம் .போஷாக்கான ஆகாரம் கொடுத்து, ஆரோக்கியமாக என்னை வளர்ப்பதில் அவளுக்கு ஆசை. மீன் அகப்பட்ட அன்று ருசியாகக் குழம்பு வைப்பாள். ஒரு பிடி பிடிப்பேன். 'நீயும் சாப்பிடும்மா' என்றால், 'எனக்கு சைவம்தாம்ப்பா பிடிக்கும். மிச்சம் வைக்காம நீயே முழுக்கச் சாப்பிடு' என்பாள். என்னிடம் அம்மா சொன்ன இரண்டாவது பொய்!
தீப்பெட்டித் தொழிற்சாலையில் அம்மா வேலை பார்த்தாள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் என்னைப் படிக்க வைத்தாள். நாள் முழுக்க அங்கு வேலை செய்தது போக இரவு பூரா மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு வீட்டிலும் தீப்பெட்டி செய்வாள். 'அம்மா தூங்கும்மா' என்றால், 'எனக்கு தூக்கமே வரலப்பா; நீ படுத்துக்கோ ராஜா' என்பாள். இது என் அம்மாவின் மூன்றாவது பொய்.
என்னுடைய பள்ளி இறுதிப் பரீட்சைக்கு அம்மாவும் வந்தாள். சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே கால்கடுக்க நாள் முழுக்க நின்றாள். மதிய இடைவெளியில் சில்லென்ற இளநீர் பருகத் தந்தாள். 'நீ குடிம்மா' என்றபோது, 'இப்பத்தாம்பா சாப்பிட்டேன்' என்றாள். அம்மாவின் நான்காவது பொய்!
அப்பா இறந்தபிறகு வறுமையுடன் போராடினாள் அம்மா. நான் குழந்தையாக இருந்தபோதே அப்பா போய்விட்டார். தனியே என்னை வளர்க்க அப்படிக் கஷ்டப்பட்டாள். பக்கத்து வீட்டிலிருந்த நல்ல மனம் படைத்த அங்கிள் சிறிதும் பெரிதுமாக அவ்வப்போது உதவினார். அக்கம்பக்கத்தினர் நல்லிதயம் படைத்தவர்கள். என் அம்மாவிடம், 'நீ இன்னும் இளமையாகத்தானிருக்கே. உனக்கும் துணை வேண்டாமா? தனியே எப்படி நாட்களைக் கழிப்பாய். திருமணம் செய்துகொள்' என்றபோது, 'எனக்கு இனி மகன்தான் துணை' என ஐந்தாவது பொய்யைச் சொன்னாள் அம்மா!
எனக்கு படிப்பு முடிந்து வேலையும் கிடைத்தது. ஆனால் அம்மா ஓய்வு எடுக்காமல் காய்கறி விற்றாள். பணம் அனுப்புவேன். திருப்பி அனுப்பி விடுவாள். 'என்னிடம் செலவுக்குத் தாராளமாக(!) இருக்கிறது. நீ பட்டணத்தில் காசுக்குக் கஷ்டப்படாதே' என்பாள் அம்மா சொன்ன ஆறாவது பொய்.
பார்ட் டைமாக மாஸ்டர்ஸுக்கு படித்து வெற்றி பெற்றேன். நல்ல சம்பளம். வெளிநாட்டில் வாழ்க்கை. 'அம்மா இனிமே எங்கிட்டே வந்துடு. ரெஸ்ட் எடு. சொர்க்கம்மா. ஜாலியா இருக்கலாம்' எனக் கெஞ்சினேன். 'இனிமே எனக்கு எதுக்குப்பா ஆடம்பரமெல்லாம்... எனக்கு ஒத்துக்காது. இங்கேயே சொச்ச வாழ்க்கையையும் இருந்துட்டுப் போயிடறேனே.என மறுத்து விட்டாள். அம்மாவின் ஏழாவது பொய்.
அம்மாவுக்கு வயதாகிவிட்டது. புற்றுநோய் வந்து அவஸ்தைப் பட்டாள். ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்தேன். மெலிந்து நலிந்து சோகையாகி உடல் பூரா வலியும் வேதனையுமாகப் படுத்திருந்தாள். நான் விக்கி விக்கி அழுதேன். என் தலையைக் கோதியவாறே, 'அழாதே ராஜா... எனக்கு வலிக்கவேயில்லை. சரியாப் போயிடும்... நான் பிழைச்சுடுவேன்' என்றாள், இது அவளின் எட்டாவது பொய்.
தன் வாழ்வின் கடைசி பொய்யைச் சொல்லிவிட்டு இறந்துபோனாள் என் அம்மா!
இச்சிறுகதை கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்