அந்த எக்ஸ்போர்ட் கம்பெனியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் கிரிஜாவும் ஒருத்தி. மோட்டார் பொருத்தப்பட்ட தையல் மெஷின்கள் ‘டர்’ ‘டர்’ என்ற சப்தத்துடன் இயங்கிக் கொண்டிருந்தன.
அந்த கம்பெனியில் வார சம்பளம் மாத சம்பளம் இவ்வளவு அவ்வளவு என்று யாருக்கும் கிடையாது. நூறு பீஸ் தைத்தால் இவ்வளவு என்ற அடிப்படையில் சம்பளம் கணக்கிட்டுக் தரப்படும். அதற்காக நம் இஷ்டத்திற்கு எல்லாம் நூற்றுக்கணக்கில் தைக்க முடியாது. தைப்பதில் சிறு தவறு ஏற்பட்டால் கூட அதற்கான தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்து விடுவார்கள்.
கிரிஜாவிற்குத் தேவை பணம். தன் ஒரே மகள் அவந்தியை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். வாழ்க்கையில் தன்மானத்துடன் உழைத்து உயர்ந்து காட்ட வேண்டும்.
நீங்கள் நினைப்பது போல கிரிஜா ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல. வில்லா, கார் என வசதியாக வாழ்ந்தவள்தான். அவளுடைய கணவன் கிரிதர் ஒரு கம்பெனியின் எம்டியாக பணியாற்றிக் கொண்டிருந்தான். கை நிறைய சம்பளம்.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் திருமணமானது. திருமணமான புதிதில் கிரிதரை அவளுடைய குடும்பத்தினர் அனைவரும் புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளுவார்கள். அவளுடைய சிநேகிதிகளும் அப்படித்தான்.