
-தனலட்சுமி கருப்பையா
மனத்தில் கலவரம் குடிகொண்டது. கேவலம் ஒரு நாய், சாதாரண ஒரு தெரு நாய் என்னை ஒரு வழி பண்ணாமல் விடாது போலிருக்கிறதே! பால்கனியில் நின்று, மெதுவாக எட்டிப்பார்த்தேன். அந்தக் கறுப்பு நாய் அதே சமயம், சொல்லி வைத்தாற்போல், கேட்டுக்கு வெளியே நின்றவாறு என்னை ஏறிட்டுப் பார்த்தது. அந்தப் பார்வை! 'உனக்கு இரக்கமே இல்லையா? என்று கெஞ்சுவதுபோல் ஒருகணம், 'நான் உள்ளே வந்தால் உனக்கென்ன?' என்று முறைப்பதுபோல் ஒருகணம், 'எப்படியும் நான் உள்ளே வந்துவிடுவேன் பார்!' என்று மிரட்டுவதுபோல் ஒருகணம், எனக்கு மாறி மாறித் தோன்றியது. ''சூ" என்று விரட்டினால், நாயானது ஓடித்தான் பார்த்திருக்கிறோம். இதுவானால், மாலை நாலு மணியிலிருந்து, இப்படி அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருக்கிறதே!
முதலிலேயே இதை காம்பவுண்டுக்குள், விட்டுப் பழக்கியது தப்பு. விரட்டி யடித்திருக்க வேண்டும். ஆனால் கீழ்ப்போர்ஷனில் குடியிருக்கும் மீனாட்சிக்கு இரக்க சுபாவம் அதிகம் என்பதைவிட, தன் சின்னஞ்சிறு குழந்தைகள் வைத்துவிடும், மிச்சம் மீதியைத் தின்ன ஒரு ஆள் வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இடுப்பிலிருக்கும் குழந்தைக்கு, நாயை வேடிக்கை காட்டி ஊட்டியதுபோக, மீதியிருக்கும் பால் சோற்றை அப்படியே கவிழ்த்து விட்டுப் போய்விடுவாள்.