
-பத்மா
மன்னார்குடியில் அந்தச் சிறிய சந்தில் நுழைய முடியாத பெரிய காரை தெருமுனையில் நிறுத்திவிட்டு இறங்கினான் தாரகன். வாட்டசாட்டமான வாலிபன் ஒருவன் ஒட்டுக் கூரை வீட்டில் நுழைந்ததை தெருவே ஆச்சரியமாகப் பார்த்தது.
''வாங்க, யாருன்னு தெரியலையே'.'
குரல் வந்த திசையில் மங்கலாகத் தெரிந்த உருவத்தைப் பார்த்து, "தாரகன் வந்திருக்கேன்" என்றான்.
தன்னைவிட மிஞ்சிப் போனால் பத்தே வயது பெரியவளை சித்தி என்று கூப்பிட ஏற்பட்ட தயக்கத்தில் உறவின் விளிப்பு உள்ளேயே அமிழ்ந்தது.
"தாரகா! வாப்பா, நல்லாயிருக்கியா? சின்ன வயசுலே உங்கப்பா இருந்த மாதிரியே உசரமா, இருக்கே! கலர்தான் உங்கம்மா மாதிரி நல்ல சிவப்பு. அடையாளம் இப்ப நல்லாவே தெரியுது!" பரபரத்தாள் சித்தி பானு.
'எந்தச் சூழ்நிலையையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள இந்தப் பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது?' தாரகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால் தனக்குக்கூட சூழ்நிலையின் இறுக்கம் குறைந்ததை உணர்ந்தான்.
"யாரு வந்திருக்கா?" கயிற்றுக் கட்டிலில் நைந்த துணியாய் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாலும் அப்பாவின் குரலின் கனம் மட்டும் குறையவேயில்லை.
''உங்க பெரிய பிள்ளை தாரகன் வந்திருக்கான்" சித்தியின் பேச்சில் மகிழ்ச்சியின் படபடப்பு தெரிந்தது.
''தாரகனா? பெத்து வளர்த்த அப்பன் நினைப்பு இத்தனை வருஷத்திற்கு அப்புறமாவது வந்ததே, சந்தோஷம். வந்ததுதான் வந்தே, இப்பவோ நாளைக்கோ போகப்போற என் நெஞ்சுல ஒரு சட்டி நெருப்பைக் கொட்டி காரியத்தை முடிச்சுட்டுப் போய்ச் சேர்" - விஷம் தோய்ந்த ஈட்டியாய்ப் பாய்ந்து நெஞ்சுச் சதையைக் குத்தியிழுக்கும் அதே நிஷ்டூரப் பேச்சு.