
-வி.ஜி. ஜெயஸ்ரீ
நினைத்து, நினைத்து ஆறவில்லை ரமாவிற்கு. நடந்தது இது தான். காலை அலுவலகம் போகும் அவசரத்தில் பறந்துக் கொண்டிருந்தான் செழியன். "ஒரு வாய் சாப்பிட்டு போங்க," என கெஞ்சி, இட்லி எடுத்து வைத்து, சட்னி ஊற்றினாள் ரமா.
"எப்ப பாரு இட்லி தோசை தானா? எங்க ஆஃபிஸ்ல வேறு ப்ராஞ்ச்ல இருந்து டிரான்ஸ்ஃபர்ல போன மாதம் தான் மல்லிகான்னு ஒருத்தங்க ஜாயின் பண்ணினாங்க.
அவங்க பல்லாவரத்துல இருந்து கரெக்ட் டைமுக்கு டிரெயினை பிடிக்கணும்னு, காலை டிபனையும் கட்டி எடுத்துக்கிட்டு வந்து ஆஃபிஸ்ல தான் சாப்பிடுவாங்க. விதம் விதமாக ஆப்பம், கிச்சடி, அடை, அவியல், பூரி, சப்பாத்தின்னு கொண்டு வருவாங்க. அவங்க டிரெஸ் பண்றதை பார்க்கணும், காட்டன் புடவை தான் கட்டுவாங்க. ஆனால், ஒரு கசங்கல் கூட இருக்காது. அவ்வளவு தூரத்திலிருந்து வந்தாலும் பளிச்சுன்னு இருப்பாங்க. நீயும் இருக்கியே அழுது வடிஞ்சுக்கிட்டு.
நேத்துக் கூட அவங்க கேட்டாங்க. ‘என்ன செழியன், எப்ப கல்யாண சாப்பாடு போட போறீங்கன்னு?’ எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவருக்கு கல்யாணம் ஆகி, ஆறு மாச ஆண் குழந்தை இருக்குன்னு மத்தவங்க சொன்னவுடனே அவங்களாலே நம்பவே முடியல. ‘ரியலி! நீங்க அழகா, இளமையா, சிம்பு மாதிரியே இருக்கீங்க’ன்னு சொன்னாங்க. அவங்க வந்ததிலிருந்தே, என்னையே தான் மொறைச்சு, மொறைச்சு, பார்ப்பாங்க. ம்ஹீம், நான் தான் அவசரப்பட்டுட்டேன் போலிருக்கு," என்றான்.