

-பத்மா
ஏரியில் கண்ணுக்கெட்டியவரை கண்ணாடியாய்த் தண்ணி தெளிஞ்சு விரிஞ்சு கிடக்கும். சின்னச் சின்ன அலைகள் கரையை மோதும்போது 'களக் களக்'குன்னு பச்சைப் புள்ளை சிரிக்கற மாதிரி சத்தம் கேட்கும். தண்ணியிலே காலை வைச்சா போதும்; 'மொசு மொசு'ன்னு மீன் கூட்டம் காலை மொய்ச்சி விரலிடுக்கைக் கொத்திச் சுத்தம் பண்ணிடும். மாடு கன்னுக்குப் புல்லு வாங்க காசு போட்டதே கிடையாது. ஏரி மேட்டுப் புல்லை மேய்ஞ்சு நிழல்ல படுத்து அசை போடும். படித்துறை இறங்கித்தான் தண்ணி மொள்ளணும். நுங்குத் தண்ணி கணக்கா அத்தனை இனிப்பு!
ஊருக்கே செல்லப் பிள்ளைதான் அந்த செங்கணான் ஏரி, கோடையில் தண்ணி சுருங்கும்போது தூர்வாரல் பத்து நாள் திருவிழா போல நடக்கும். ஊர்ச்சனம் முச்சூடும் வேலை செய்யும். படிவு மண்ணை சண்டைச் சச்சரவு இல்லாம அவங்கவங்க வயலுக்கு எடுத்துட்டுப் போவாங்க.
"ஏய் கிழவி, என்னா ரோசணை எப்பவும்? கருவாடு பொரிச்சிருக்கியா, இல்லியா?"
மகன் கலியன் போட்ட கூச்சலில் சுயநினைவுக்கு வந்தாள் கருப்பாயி. கிழவிக்கு வயசு எழுபத்தைந்து இருக்கலாம். பெயருக்குப் பொருத்தமில்லாத நல்ல சிவப்பு. தீர்க்கமாக 'சரசர' என்று இறங்கிய மூக்கின் கூர்மையும், பரந்த நெற்றியும், புருவ மத்தியிலிருந்து வகிடு வரை விரைந்த பச்சைக்குத்தும் கருப்பாயி, சின்ன வயதில் நல்ல அழகியாக இருந்ததற்கான அடையாளங்களாக மிஞ்சியிருந்தன.
'கருவாட்டு வறுவலும் காரக் குழம்பும் பண்ணி வெச்சிருக்கேன்; போட்டுத் தின்னுட்டுப் போ."
கிழவியின் பேச்சும் போக்கும் ரொம்ப நாட்களாகவே வித்தியாசமாக இருப்பது கலியனுக்கு நன்றாகவே தெரிந்தது. ஆராய விருப்பமில்லை. அவசியமாகவும் அவனுக்குத் தோன்றவில்லை.