

-லில்லி ராமதுரை
"வசந்தி... என்ன பண்றே..ஒரு மணி நேரமா கிச்சன்ல, வந்திருக்கறவங்ககிட்ட நாலு வார்த்தைகூட உட்கார்ந்து பேச நேரமில்லாம, உன் மருமக எங்கே?"
"உஷ்..ஷ்.. கொஞ்சம் மெதுவா பேசுங்களேன். மத்தவங்க காதில விழுந்துடப் போகுது. ஆர்த்தி ஆபீஸ்லேர்ந்து வந்ததுமே தலைவலின்னு சொன்னா... மாடியில படுத்திருக்கா..."
"தெரியாமத்தான் கேக்கறேன்.... அதென்ன சொல்லிவச்ச மாதிரி வீட்டுக்கு விருந்தாளிங்க யாராச்சும் வந்தா, இல்லே வேலை கொஞ்சம் அதிகமா இருந்தா அவளுக்குத் தப்பாம தலைவலி வந்திருமோ?"
"நீங்க எதுக்கு டென்ஷனாகறீங்க... என்ன ஆச்சு இப்ப? நாம கொஞ்சம் பொறுத்துப்போனா வீடு நிம்மதியா இருக்கும். எல்லாம் நா பாத்துக்கறேன். நீங்க அவங்களோட பேசிக்கிட்டிருங்க... ஒரு பத்து நிமிஷம்தான். சமையல் முடிச்சிட்டு வந்திடறேன்.''
"உன் பையனுக்குப் புத்தி எங்கே போச்சு? போய் அம்மாவுக்கு ஏதாவது உதவி செய்னு ஆர்த்தியை அனுப்பி வைக்கத் தோணாதா? உனக்கு வயசாகலையா? இதெல்லாம் ஒண்ணும் சரியில்ல. எப்பவும் இப்படியே விட்டுக் கொடுத்திட்டே இருந்தா ஒருநாள் அவ உன்னோட தலையில ஏறி உட்காரத்தான் போறா... நீ வேணா பாரு..." என்று முணுமுணுத்தவாறே மோகன் அங்கிருந்து நகர்ந்தார்.
'அப்பாடா' என்றிருந்தது வசந்திக்கு.
சுறுசுறுப்பான பொறுப்பான கணவர். எல்லாம் அதனதன் ஒழுங்குபடி நடக்கவேண்டும் என்பதில் கண்டிப்பானவர். யாருக்கும் பாசத்தில் கவனிப்பில் குறைவைக்காதவர்தான்.
ஆனால் முன் கோபியாயிற்றே!
பிள்ளைகளையும், மருமகளையும்கூடச் சமாளித்து விடலாம். இவரைச் சமாளிப்பதும், சமாதானப் படுத்துவதும்தான் பெரும்பாடு. இந்த மனுஷனைப்போல் நானும் ஆத்திரப்பட்டால் வீடு, வீடாவா இருக்கும்?