

-ராஜேஸ்வரி புத்ரி
ஒரு வழியாகக் குழந்தைகளும் சிவாவும் ஸ்கூலுக்கும் ஆபீஸுக்கும் போயாகிவிட்டது. பகல் நேரம் முழுவதும் அவளது சோஃபா நிறையத் துணிகளும் கீழே இறைந்து கிடக்கும் புத்தகங்களும், ஈரத்துண்டுகளும், டைனிங் டேபிள்களே பரமும் வா வா என்று அழைத்தாலும், வாயில் கதவைத் தாழ் போட்டுவிட்டு நிதானமாகத் தரையில் உட்கார்ந்து மனம்விட்டு அழ ஆரம்பித்தாள் கமலி.
ஏன் இப்படி? நான்தான் தவறு செய்கிறேனா? பார்த்துப் பார்த்து ஆசை ஆசையாக எல்லாம் செய்தாலும் குற்றம் மட்டுமே அவர் கண்ணில் விழுகிறதே? ஒரு நிமிடம்கூட அலுத்துக்கொள்ளாமல் பம்பரமாகச் சுழன்று அன்போடு அத்தனையும் செய்தாலும் ஏன் இப்படி வெறுப்பை உமிழ்கிறார்? நின்றால், உட்கார்ந்தால், துளி உப்பு அதிகமாகிவிட்டால், கை தவறி ஒரு பாத்திரம் விழுந்துவிட்டால், ஒரு அரை மணி நேரம் அதிகமாகத் தூங்கிவிட்டால், எத்தனை திட்டு, கத்தல், தேள்போல கொட்டல்! சே!
தினம் தினம் புதுப்புது உணவு வகைகள் சமைத்து, எல்லோருடைய உடைகளையும் துவைத்து அழகாக அயர்ன் பண்ணி, வீட்டு நிர்வாகம் முழுதும் செம்மையாகக் கவனித்துக்கொண்டு, குழந்தைகளையும் நல்லபடி படிக்க வைத்து, வீட்டையும் தோட்டத்தையும் சுத்தமாகப் பராமரித்து இதற்கெல்லாம் ஒருமுறைகூட பாராட்டத் தோன்றியதில்லையே.
''நீ ஒரு மக்கு, சோம்பேறி, வீட்டில்தானே இருக்கிறாய், இதைக்கூட செய்ய முடியாதா? ஏன் மத்தியானத்தில் தூங்குகிறாய்?" இதைத் தவிர வேறு கேள்விகளே கேட்கத் தெரியாதா?