
-லதா சேகர், மும்பை
சராசரி பெற்றோர்களுக்கு இருக்கும் கனவுபோலவே என் பெற்றோருக்கும் இருந்தது. 'மகன் கம்ப்யூட்டர் இன்ஜினியராகணும்' என்று. நானும் அப்பா-அம்மாவின் சொல் மீறாத கடமை பிள்ளையாக கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்த கையோடு யு.எஸ்ஸில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன்.
எந்த இடத்தில் இருக்க விரும்பினேனோ அங்கு வந்துவிட்டேன். ஒரு ஐந்து வருடத்திற்கு இருக்கலாமென முடிவெடுத்தேன். அப்போதுதான் இந்தியா போய் செட்டிலாவதற்கு கையில் கொள்ளையாகப் பணம் சம்பாதிக்க முடியும்...
என் அப்பா ஓர் அரசு ஊழியர். வேலையிலிருந்து ரிடையர் ஆனபிறகு அவரால் வாங்க முடிந்தது ஒரு ஒன் பெட்ரூம் ஃப்ளாட் மட்டுமே!
அவரைவிட சிறப்பாக நான் ஏதேனும் சாதிக்க விரும்பினேன். காலம் செல்லச் செல்ல ஒருவித ஹோம்சிக்னெஸ் வந்து வாடினேன். ஒவ்வொரு வாரமும் வீட்டுக்குத் தொடர்புகொண்டு அப்பா-அம்மாவிடம் பேசுவேன், சீப்பாக இன்டர்நேஷனல் ஃபோன்கார்டு போட்டு!