
-ரா. ஸ்ரீவித்யா
"அம்மா, ஹாட்பேக்கில் சப்பாத்தியும், ஆலூ மட்டரும் வெச்சிருக்கேன். சாயங்காலம் சாப்பிட்டுடுங்க" என்றபடியே தன் கைப்பையைத் தூக்கிக்கொண்டு வெளியேறினாள் கீர்த்தனா. வாசலில் பிள்ளை அருண் பைக்கை ஸ்டார்ட் செய்வதும், கிளம்புவதும் தெரிந்தது.
"இவ வேலைக்குப் போகலைன்னு யார் அழுதா? கேட்டா... பைனான்சியல் சப்போர்ட்... மென்ட்டல் சப்போர்ட்னு பதில் சொல்றான்!" ஜெயம் புலம்பியவாறே சபேசனுக்கு டிபன் எடுத்து வைத்தாள். பூஜையறை யிலிருந்து விபூதி இட்டுக்கொண்டே வந்த சபேசன் சாப்பாட்டு மேஜையில் வந்து உட்கார்ந்தார். "இன்னிக்கு என்ன டிபன்?" வினவிய சபேசனிடம் ஜெயம், "கழுதை கெட்டா குட்டிச்சுவர்னு, வேறு என்ன? குழைஞ்சு போன பொங்கலும் கொத்ஸும்தான்" என்றாள்.
"அதுக்கேண்டி அலுத்துக்கற? ஆஃபீஸ் போற அவசரத்துலயும் எந்த மருமகள் ஒத்தாசையா இருக்கா? ஈஸ்வரன் இந்த அளவு இன்னிக்குப் படி அளந்திருக்கானேன்னு சந்தோஷப்பட்டுக்கோ' சபேசன் பொங்கலைச் சாப்பிட்டபடியே கூறினார்.
"ஆமா! தினம் பொழுது விடிஞ்சு பொழுதுபோனா இதே பாடுதான். அருணும் பொண்டாட்டிய ஒண்ணும் கேக்கறது கிடையாது. மாசம் ஆனா பணத்தை மட்டும் கையில கடனேனு திணிச்சுட்டுப் போயிடறான். பிள்ளையோட கடமை அதோட முடிஞ்சுடுச்சா? ஒரு பேரனோ பேத்தியோ கையில் இருந்தா, அதோட சந்தோஷமே வேற" அலுத்துக்கொண்டாள் ஜெயம்.
சற்று நிமிர்ந்த சபேசன், "ஏண்டி ஜெயம் உனக்கென்ன எல்லாம் மறந்து போச்சா? ஒரு வருஷம் முன்னால கீர்த்தனாவுக்குப் பெண் குழந்தை பொறந்து, இறந்துபோச்சு. அதைப் பார்த்து கதறிக் கதறி அழுது, கீர்த்தனா நார்மல் ஆகவே மூணு மாசம் ஆச்சு! ஏதோ சிறுசுகள் ரெண்டும் இப்போதைக்குக் குழந்தை வேண்டாம்னு நெனைச்சிருப்பாங்க. கொஞ்ச நாள் போகட்டும் விடு."