
-ம. இந்திராணி
வீடு நிறைந்திருந்தது. தாயம்மாவின் ஆறு மகன்கள், மருமகள்கள், பேரப் பிள்ளைகள், சம்பந்திகள், புகுந்த வீட்டு மனிதர்கள், பிறந்த வீட்டு ஜனங்க... ஊர் நண்பர்கள், உறவினர்கள் என வீடே 'ஜே ஜே' என்றிருந்தது.
தாயம்மாவின் கணவர் கந்தசாமிக்கு அன்று முதல் திவசம்.
''ஆமா! ஒரு குறை இருக்கக்கூடாது... எவ்வளவு செலவானாலும் சரி! ஊர் மெச்சச் செஞ்சுடணும்!" என்று மகன்கள் பேசிக்கொண்டதை, மருமகள்களும் ஆமோதித்தார்கள்.
சாஸ்திர சம்பிரதாயம், தானம், தருமம் எதையும் விட்டுக்கொடுக்காமல் நிறைவாகச் செய்தார்கள். சாஸ்திரிகள் பிண்டம் வைத்துச் செய்விக்க, மூத்த மகனும் மற்றவர்களும் பயபக்தியுடன் திவசம் கொடுத்தார்கள்.
இரு தலைவாழை இலை நிறைய பலகாரங்கள், பழங்கள், இனிப்பு வகைகள் நிரம்பி வழிந்தன.
"அப்பாவுக்குப் பிடிச்ச நெய் ஜாங்கிரியும் முள்ளு முறுக்கும் வைக்கணும்" என்று சொன்ன கடைசி மகன், அள்ளி அள்ளி வைத்தான்.
புது பட்டு வேட்டி, அங்கவஸ்திரம், சர்ட்டு, பேன்ட்டு என இரண்டாம் மகன் தடபுடல் செய்திருந்தான்.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த தாயம்மாவின் முகத்தில் ஆழ் கடலைத் தாண்டிய பரிபூரண அமைதி! அப்படியே ஓர் ஓரமாய் அமர்ந்து கூப்பிய கையை விலக்காமலே இருந்தாள்.