
-மாதவி ரவிச்சந்திரன்
கடலூர் போய், பெற்றவர்களை ஒரு பறக்கும் சந்திப்பு (அதாங்க ஃபளையிங் விசிட்) முடிந்து வீடு வந்தால் என் மகன் அருணின் ஒரு பக்கக் கன்னத்தில் நல்ல வீக்கம்.
"என்னடா! லாலிபாப்பை இப்படியா ஒரு பக்கம் அடக்கறது?" என்று வேடிக்கையாகக் கேட்டேன்.
"நீ வேறம்மா! எறும்பு கடிச்சிடுச்சி."
"எறும்பு கடிச்சா இப்படியா வீங்கும்? கிட்ட வா பார்க்கலாம்" என்று உற்றுப் பார்த்தேன்.
"என்னங்க! பசங்களைக் கவனிக்காம என்னதான் பண்ணீங்க, பாருங்க புள்ளை கன்னம் கொழுக்கட்டையா வீங்கியிருக்கு."
அதிசயமாக என் கணவர் எதுவும் பேசவில்லை.
இலேசாக கண் அயர்ந்ததில் அடுப்பில் வைத்த அரை லிட்டர் பால் சுண்டி பால்கோவா ஆகி, பின் தீய்ந்து, வீடு முழுக்க புகை கிளம்பி என் மகள் மானஸா எழுப்ப, திடுக்கிட்டு எழுந்தவரைப் பார்த்து கரிப்பிடித்த பாத்திரம் 'ஈ'யென்று இளித்துக்கொண்டிருந்தது. இதையும் சொல்லி என்னிடம் டோஸ் வாங்க மனமில்லை போலும்.