
-நிலா ரசிகன்
கால்சட்டை பை நிறைய பை நிறைய கோலிக் காய்கள்; ஜெயித்த சந்தோசத்துடன் வேகமாய் வீட்டுக்கு நடந்துகொண்டிருந்தேன். கோலிக்காய்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போது ஏற்படும் சத்தம் சந்தோசம் தருவதாய் இருந்தது. வீட்டை நெருங்கும்போதுதான் வேதக்கோவில் மணிச்சத்தம் ஆறுமுறை கேட்டது. ஆறு மணி தாண்டியபின் வீட்டுக்குள் நுழைந்தால் அப்பா அடி பின்னிவிடுவார். அடிவாங்குவது எனக்கு பழக்கமானதுதான். ஆனாலும் வலிக்குமே!
வேகமாக லட்சுமி அக்காள் வீட்டுக்கு ஓடினேன். எங்கள் வீட்டின் பின்புறம்தான் அவர் வீடிருக்கிறது. அவர் வீட்டு வேலியைத் தாண்டிக் குதித்தால், எங்கள் வீடு. அதன்பின் மெதுவாய் புறவாசல் வழியாய் உள்ளே நுழைந்துவிடலாம். மாட்டுக்கு புண்ணாக்குத் தண்ணீர் வைத்துக்கொண்டிருந்த லட்சுமி அக்கா- என்னைப் பார்த்தவுடன் சத்தம் போட்டு கத்த ஆரம்பித்தார்.
''எலேய் பாண்டி! நெதமும் என் வீட்டு வேலிய பிரிச்சுப் பிரிச்சு திருட்டுத்தனமா வீட்டுக்குப் போறியே, ஒரு நாளாவது வெளக்கு வைக்கிறதுக்கு முன்னால வீட்டுக்குப் போயிருக்கியா? அப்படி என்னதான் வெளையாட்டோ! உங்கப்பன்கிட்ட சொல்லி உன் காலை ஓடைக்க..." அவர் முடிப்பதற்குள் நான் என் வீட்டுத் திண்ணையில் ஏழாம் வகுப்பு கணக்குப் புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தேன்.
திண்ணைக்குப் பக்கத்தில் வேப்ப மரத்தடியில் கட்டியிருந்த ஜானி, என்னைக் கண்டதும் வாலாட்டியது. ஜானி, நான் வளர்க்கும் நாட்டு நாயின் பெயர் (நாட்டு நாய்குட்டிபோல் தெருவில் சடை நாய்க் குட்டி கிடைப்பதில்லையே ஏன்?) கணக்குப் புத்தகத்தையும் ஜானியையும் பார்த்த என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. எல்லாம் ஜானியின் பெயரில் வந்த சிரிப்புதான்.