
-வி.கே.லக்ஷ்மிநாராயணன்
திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வதுபோல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி பை காணப்பட்டது.
கோமளா மாமி கொஞ்சம் வித்தியாசமானவள். தாலி கட்டிய ஒரு வாரத்திற்குள் அவள் புருஷன் அவளை விட்டு ஓடிவிட்டான். அதனால் கொஞ்சம் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாள். பேச்சுதான் ஒருமாதிரி இருக்கும். மற்றபடி அவளால் எந்தத் தொந்தரவும் கிடையாது.
மாமி மீது வைதேகிக்கு எப்போதும் ஒரு ஒட்டுதல் உண்டு. மற்றவர்களைப் போல் இல்லாமல் மாமி என்ன சொன்னாலும் மரியாதைக்கு காது கொடுத்து கேட்பாள். அதற்கு பதிலோ இல்லை அபிப்ராயமோ சொல்வாள்.
" வைதேகி உனக்கு மங்களம் மாமியைத் தெரியுமோல்லியோ ?"
திடீரென மாமி இப்படி கேட்டதும் அந்த நபர் யாரென்று வைதேகிக்கு தெரியவில்லை. ஞாபகத்திலும் வரவில்லை. " யார் மாமி அது ?" முறைத்துப் பார்த்த மாமி "அதாண்டி சன்னதித் தெரு முதல் ஆத்துல இருக்கறவா. அவாளப் போய் தெரியாதுங்கறயே?" கொஞ்சம் கோபத்துடன் கேட்டாள்.
அதற்கு மேல் தெரியாது என்று சொன்னால் மாமி ருத்ரதாண்டவம் ஆடுவாள். இடம் பொருள் ஏவல் பற்றியெல்லாம் மாமிக்கு அக்கரை கிடையாது. " ஓஹோ! அந்த மங்களம் மாமியா" என சமாளித்த வைதேகி "சொல்லுங்கோ அவாளுக்கு என்ன ?" மிகுந்த அக்கரை கொண்டது போல் விசாரிக்க மாமியின் கோபம் அடங்கியது.