
-பத்மா
நான்கு பக்க வீடுகளின் பால்கனிகளைத் தொட்டு குடை பரத்தி நின்ற வேப்பமரத்தை, வழக்கம்போல் நலம் விசாரிக்க நின்ற வேம்பு மாமிக்கு, மனம் கொள்ளாத வருத்தம். மரம் இருப்பது இடைஞ்சல் வெட்டிவிடலாம் என்று காலனி கமிட்டியில் தீர்மானம் ஆனதுதான் காரணம். மாமியின் தாத்தா காலத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான மரங்களுடன் தோப்பாக இருந்த இடத்தில் இன்று எண்பதைத் தொடும் மாமி, தமது எட்டாவது பிறந்த நாளன்று ஆசையாக நட்டுப் பராமரித்து வளர்த்த மரம் அது.
மனித இனப் பெருக்கத் தேவைக்கேற்ப கட்டடங்கள் காளான்களாய் முளைக்க, இந்த மரம் மட்டும் தோப்பின் கடைசி வாரிசாய் மிஞ்சி நின்றுவிட்டது. நல்ல மனம் படைத்த பில்டர் ஒருவர் மரத்தைச் சுற்றி எழுப்பிய குடியிருப்பில் வேம்பு மாமியின் சென்டிமெண்ட்டுக்காகவே மாமியின் கணவர் வேதபுரீஸ்வரன், இந்த ஃப்ளாட்டை வாங்கினார்.
"கா... கா...'' என்று நொண்டிக் காக்கை குரல் கொடுத்ததும் மாமி இயல்பு நிலைக்கு வந்தார்.
''வாடியம்மா உனக்குச் சாப்பாட்டு நேரம் வந்தாச்சு. நாளைக்கு இந்த மரத்தை வெட்டிவிடப் போறா குடியிருப்புக்கு என்ன பண்ணப் போறே?" அக்கறையாகக் கேட்டபடி சோற்று உருண்டையைக் கையில் வைத்து நீட்டியதும் 'கர்...' என்று அடிக்குரலில் செல்லமாகக் கத்திவிட்டு, கொத்திக்கொண்டு பறந்தது.