
-கீதா பென்னட்
"சாரு... சாயந்திரம் ஏர்போர்ட்டுக்குப் போகணுமே. கால் டாக்ஸிக்கு சொல்லிட்டியா?" அம்மா என்னை விரட்டினாள்.
என் தம்பி ஸ்ரீதரன் மனைவி நிரவதி வருகிறாள். அவள் வருவது தெரிந்த நாளிலிருந்து அம்மா பண்ணுகிற ஆர்ப்பாட்டம்தான் எனக்குக் கோபத்தைக் கொடுக்கிறது.
அம்மா சமையலறையிலிருந்து 'மாலா... மாலா...' என்று பலமுறை கத்தியும் அடுத்த அறையிலிருந்து பதில் வராததால் நேராகவே போனாள். நானும் பின்னாலேயே போனேன். மாலா என் அப்பாவின் அண்ணனின் ஒரே மகள். அவளுடைய துரதிருஷ்டம் அவளுடைய நான்காவது வயதிலேயே பெற்றோர் இருவருமே ஒரு ரயில் விபத்தில் இறந்து போனது. அப்பாவுடைய வேண்டுதலை மீறாமல் அம்மா அவளைத் தன் கூடவே வைத்துக் கொண்டாள். என்னைவிட எட்டு வயது சின்னவள். அவளுக்கு இப்போது தீவிரமாக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கிறோம்.
மாலா கையில் புத்தகத்தோடு காதில் வாக்மேனோடு படுக்கையில் குப்புறப் படுத்துக்கொண்டு படித்தபடியே காலையும் ஆட்டிக்கொண்டிருந்தாள். அம்மா அவளருகில் போய் காதிலிருந்து ஒயரைப் பிடுங்கினாள். 'மாலா... எத்தனை தடவை உன்னைக் கூப்படிறது? உன் பேருக்கு பதிலா கிருஷ்ணா, ராமான்னு சொன்னாலும் மோட்சத்துக்கு ஸ்டிரெய்ட்டா போய்டுவேன்...'