

-எஸ். கமலா
"உங்க ஃப்ரெண்டு சிவப்பிரகாசம் ஃபோன் பண்ணினாரு!" என்றாள் என் மனைவி. அப்பொழுதுதான் அலுவலகத்திலிருந்து வீட்டினுள் நுழைந்திருந்தேன்.
"என்னவாம்?" என்றேன் முகத்தைத் தண்ணீரால் அறைந்துகொண்டு.
"அவரோட அப்பா காலமாயிட்டாராம்!”
"என்னது?" என் கைச்சொம்பு நழுவி வாளியில் விழுந்தது.
''ஆமாம், இன்னிக்குக் காலை பதினோரு மணிக்கு இறந்துட்டாராம். நாளை காலை ஏழு மணிக்கு எடுக்கறாங்களாம்."
"பிரகாசமேவா பேசினான்?"
''ஆமாம். ஏன்?"
"இல்லை. தகப்பனை இழந்தவன். பாவம் அதை தானேவா சொல்லணும்? எத்தனையோ பேர் இருப்பாங்களே துக்க வீட்டில்? அவங்களை விட்டுச் சொல்லக்கூடாதா, பாவம்?"
"நீங்கன்னா அவருக்குத் தனி பிரியமாச்சே! அதான்!"
''சரி, வரியா புறப்படலாம்?" - இருவரும் கிளம்பிவிட்டோம்.
பஸ்ஸுல போகும்போது சிவப்பிரகாசம் பற்றித்தான் பேச்சு.
''பாவங்க, உங்க ப்ரெண்டு குரல்ல அப்படி ஒரு சோகம். துக்கத்தால் கம்மிப்போய், வார்த்தைல் தெளிவில்லை! என்னதான், வயசானவர்னாலும்,அப்பா உறவு அற்புதம்தான்!”
நான் சிரித்துவிட்டேன். அவள் என்னை வினோதமாய்ப் பார்த்தாள்.
''சிரிக்கிற விஷயமா இது? எதுக்கு இந்தச் சிரிப்பு?" என்று பல்லைக் கடித்தாள்.
"அழுதான்னியே பிரகாசம். அவன் அழுகைக்கு அர்த்தமே வேற!"
''என்னது?"
"ஆமாம். அவன் அப்பா இறந்ததுக்காக அழுதிருக்க மாட்டான். கஷ்டப்படாம போய்ச் சேர்ந்துட்டாரேன்னுதான் அழுதிருப்பான்!"
"என்ன?”
''ஆமாம். நிஜம் அதுதான். உண்மையில் அவுங்க அப்பா இறந்தது அவனுக்கும், அவங்க அம்மாவுக்கும் கெடைச்ச மிகப் பெரிய விடுதலை. நிம்மதி. அழுத்திய சுமையை, இறக்கி வச்ச மாதிரி அப்பாடா பெருமூச்சுதான்! ஆனா அதுக்கு முன்னாடி பாடுபட்டு, துடிதுடிச்சுச் சாகணும்னு வேண்டிக்கிட்டே இருந்தான். படுத்துக் கெடந்து, புழுத்து, படாதபாடுபட்டுச் சாகணும்னு ரொம்ப எதிர்பார்த்தான். அது நடக்காம திடீர்னு இறந்துபோனதுல அவனுக்கு நியாயம் கிடைக்காமலே போச்சேன்னு நினைச்சிருப்பான். அந்த ஏமாற்றம்தான் அவனோட வேதனைக்குக் காரணம்!''