
-லலிதா விஸ்வநாதன்
'எப்படி இருந்த ரமா அண்ணி' அன்று நூறாவது தடவையாக நினைத்து, பெருமூச்சுவிட்டாள் மாலதி.
நான்கு மாதங்களுக்கு முன், ஒரு நாள் ரமா ஆஃபீஸிலிருந்து தன் ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது சின்ன விபத்து. கீழே விழுந்ததில் ரமாவுக்கு இடதுகால் முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடனடியாக கவனித்து ஆப்ரேஷனும் செய்துவிட்டார்கள். சில நாட்களுக்குப் பின் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டதால் அதற்கும் சிகிச்சை கொடுக்கப்பட்டது. நன்கு குணமாகி இப்போது வீட்டுக்கு வந்து இருபது நாட்களாகின்றன.
மாலதி யு. எஸ்.ஸில் சமீபத்தில்தான் எம்.எஸ். கோர்ஸ் சேர்ந்திருந்தாள். அதனால் உடனே லீவு எடுக்க முடியவில்லை. ஏற்கெனவே 'ஹோம் ஸிக்'காக இருந்தவள், அண்ணியைப் பார்க்கும் தவிப்பும் சேர்ந்துகொள்ள, இப்போது கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் கிளம்பி வந்துவிட்டாள். ஒரு வார லீவுதான் என்றாலும் பரவாயில்லை.
தன்னை அழைக்க விமான நிலையத்துக்கு வந்த மாதவனைப் பார்த்ததுமே கேட்டாள், "அண்ணி எப்படி இருக்காங்க அண்ணா?”
''என்னத்தைச் சொல்ல? இப்பொழுதெல்லாம் ரமா சரியாகச் சாப்பிடறதுகூட இல்லை. கூடவே இருந்து ரொம்பவும் கட்டாயப்படுத்தினால் மட்டும், மாத்திரைகளை கடனே என்று விழுங்குறா. ஃபிஸியோதெரஃபிஸ்ட்டோட கொஞ்சம்கூட ஒத்துழைக்க மாட்டேங்கறா. ஏதாவது சொன்னா, முறைச்சுக்கிட்டு உட்கார்ந்துடுறா!"
"அண்ணியா...? சீ, அப்படியெல்லாம் இருக்காது" என்றாள் மாலதி.
"நேற்றுத்தான் டாக்டரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். தலைக்கு இன்னொரு ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம் என்கிறார்."