

-வாசுகி
காலை அலுவலகத்துக்குப்போகும் அவசரத்தில் அரக்கப் பரக்க டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்த என் கணவர். "சுஜி, நல்லவேளை நீ ஞாபகப்படுத்தினே! என் காருக்கு இன்னிக்கு ரோட் டாக்ஸ் கட்டிடு! ஆர்.சி. புக் இருக்கற இடம்தான் உனக்குத் தெரியுமே!" என்றார்.
"சரி! அம்மாவோட பேர்லே மெடிக்ளைய்ம் பாலிசி எடுக்கணும். அந்த வேலையும் இன்னிக்கே முடிச்சுடறேன். நீங்க உங்கக் காரை விட்டுட்டுப் போங்கோ! அப்படியே காரோட பாட்டரியையும் செக் பண்ணிட்டு வரேன்!" என்றேன்.
எங்கள் உரையாடலை கேட்டு முகம்சுளித்த என் மாமியார், தன் பிள்ளையைப் பார்த்து, ''ஏண்டா முரளி! நானும் எத்தனையோ தரம் உங்கிட்ட சொல்லி அலுத்துப் போயிட்டேன். இது உனக்கே நல்லாயிருக்கா? நீ செய்ய வேண்டிய வேலையெல்லாம் ஏண்டா சுஜாதா மேலே சுமத்தறே? நீயே இதையெல்லாம் செய்யக்கூடாதா?" என்றார்.
என் கணவர் அதற்குப் பதில் கூறுமுன் நான் முந்திக்கொண்டு, "பரவாயில்லை அம்மா! அவருக்கு இதெல்லாம் செய்ய நேரம் ஏது? வாரத்திலே ஆறு நாள் ஆபீஸ்! அவருக்குப் பதிலா நானே செஞ்சுட்டுப் போறேனே!" என்றேன்.
"நல்லாயிருக்கே நீ சொல்றது?" என்று என்னைப் பார்த்து முறைத்த என் மாமியார் ''ஊர், உலகத்திலே மத்தவங்க எல்லாம் இப்படியா பெண்டாட்டியை வெளி வேலைக்கு அனுப்பறாங்க! ஆனா, என் பிள்ளையைச் சொல்லிக்குத்தமில்லை. உனக்கு வீட்டிலே கால் தரிக்கிறதில்லை. ஊர்சுத்த எது சாக்குன்னு அலையறே!" என்று படபடவெனப் பொரிந்தார்.
நான் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், எங்கள் வீட்டில் தினமும் அரங்கேறும் நிகழ்ச்சி இது!
மும்பையிலேயே பிறந்து வளர்ந்த நான், சிறு வயது முதலே அப்பா செல்லம்! ஒரே பெண்ணான என்னை ஆண் பிள்ளைபோல் வளர்த்துவிட்டார். வெளியே செல்லும் போதெல்லாம் என்னையும் பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றதனால், கடை, கண்ணி, பாங்க் எல்லாம் எனக்கு அத்துப்படி.
என் பெற்றோர் சிறு வயது முதலே எனக்கு அளித்திருந்த சுதந்திரத்தினால், மனத்துக்குப் பிடித்த உடைகள் அணிவதும், சிநேகிதிகளுடன் அரட்டை அடிப்பதும், ஊர் சுற்றுவதும் பழக்கமாகிவிட்டன. பள்ளி, கல்லூரிகளில் ஆண்களுக்குச் சமமாக எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொண்டதால் ஆண்களுடன் சகஜமாகப் பேசுவதும் வேலை செய்வதும் பிரச்னையாகவே இல்லை. மும்பையில் ஒரு சில ஆண்டுகள் ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்டாகவும் வேலை பார்த்ததால், வெளியே அலைவதோ, முடிப்பதோ கஷ்டமாகவே தெரியவில்லை.